இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம்
டெல்லி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ள 'பொது நம்பிக்கை மசோதா 2026', 80 சட்டங்களின் கீழ் உள்ள 717 சிறு விதிமீறல்களைக் குற்றமற்றதாக மாற்றுகிறது.. சிறு சிறு விதிமீறல்களுக்கும் அதிகாரிகளின் கைது மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாடாளுமன்றத்தில் இப்போது ஜன விஸ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. Public Trust மசோதா எனப்படும் இது பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய மசோதா
அதாவது நமது நாட்டில் முன்பு சில விஷயங்களைக் குற்றமாக அறிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், காலம் மாறிவிட்டதால் இப்போது அந்த விஷயங்களைச் சாதாரணமாகி இருக்கும். அல்லது இப்போது அவற்றைக் குற்றம் எனச் சொல்வது முற்றிலும் பொருந்தாமல் இருக்கும். அப்படி மத்திய அரசின் 80 சட்டங்களில் உள்ள சுமார் 1,000 குற்றங்களைக் குற்றமற்றதாக்கி, இந்த மசோதா சட்டக் கட்டமைப்பை எளிமையாக்குகிறது.
இந்த மசோதா பல முக்கிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு இருந்த பல சிறு குற்றங்களுக்கு இனி வெறுமன அபராதங்கள் செலுத்தினால் போதும். சிலவற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே என்ற அளவுக்குச் சட்டம் மாற்றப்படுகிறது.. குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்ப அபராதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச அபராத தொகையில் 10% அதிகரிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கைது இல்லை
சிறு குற்றங்கள் அல்லது விதிமீறல் செய்வோருக்கு நேரடியாக அபராதம் என இல்லாமல் படிநிலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக Apprenticeship Actன் கீழ் விதிகளை மீறுவோருக்கு முதல்முறை கவுன்சிலிங், அடுத்து எச்சரிக்கை, அதன் பின்னரே அபராதம் விதிக்கப்படும். மேலும், காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டினால் சிறைத் தண்டனை என்பது நீக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோவில் புகைபிடித்தால் அபராதம் என மாற்றப்பட்டுள்ளது.
மது குடிப்பது
தற்போது நடைமுறையில் உள்ள 1985 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், மெட்ரோ ரயில் பெட்டிக்குள் அல்லது நிலையத்தில் புகைபிடிப்பது கைது செய்யப்படும் குற்றம்.. ஆனால், இந்த புதிய சட்டத்தின் கீழ் இதற்கு அபராதம் மட்டுமே என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல மெட்ரோவில் மது குடிப்பது அல்லது மது போதையில் இருப்பது என்பது கைது செய்யப்படும் குற்றம் என்பதில் இருந்து மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் குற்றமாக மாறியுள்ளது.
அதேபோல போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையில் பல குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் காலம் முடிந்த பிறகு அதைப் புதுப்பிக்க 30 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.. தாமதமாகப் புதுப்பிப்பது இனி குற்றச் செயலாகக் கருதப்படமாட்டாது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை முடக்குவோருக்கு முன்பு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இப்போது அதுவும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது. ஒரு சிவில் அபராதமாகவே இருக்கும்.
அபராதம் மட்டுமே
பொதுப் பாதுகாப்பு சார்ந்த பல விதிமீறல்களும் மாற்றப்பட்டுள்ளன.. தெரியாமல் அல்லது தவறான தீ அபாய எச்சரிக்கை விடுப்பது என்பது கிரிமினல் குற்றமாக இருந்த நிலையில், அது நீக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சாரச் சட்ட உத்தரவுகளைப் பின்பற்றாமல் இருந்த மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் குற்றமாக இருந்த சூழலில் இப்போது அது வெறும் அபராதம் என மாற்றப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிச் சட்டத்தின் கீழ் பிறப்பு/இறப்புகளைத் தெரிவிக்காதது, பதிப்புரிமைப் பதிவேட்டில் தவறான பதிவுகள் செய்வதும் இனி குற்றமில்லை.
விவசாயம், சுகாதாரத் துறைகளிலும் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பழைய சட்டத்தின் கீழ் கால்நடைகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தும்போது கால்நடை உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். அது இப்போது அபராதமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல விலங்குகளைக் கைவிடுவதும் குற்றவியல் தண்டனைக்குப் பதிலாக சிவில் அபராதமாக இருக்கும். உரிய விதிகளைப் பின்பற்றாமல் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்றால் வருடச் சிறை விதிக்கப்படும் என்பது நீக்கப்பட்டு, அபராதங்கள் மட்டுமே என மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications