ஜார்க்கண்ட் தேர்தல்: 'பழங்குடிகளிடம்' தோற்றுப் போன பாஜகவின் 'லவ் ஜிஹாத்.. லேண்ட் ஜிஹாத்' ஆபரேஷன்!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக முன்வைத்த முழக்கம் 'லவ் ஜிஹாத் லேண்ட் ஜிஹாத்'-க்கு முடிவுகட்டுவோம் என்பதுதான். பழங்குடி மக்களை மையமாக வைத்து பழங்குடி மக்களின் வாக்குகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் இருந்து பிரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட இந்த முழக்கம் பெரும் தோல்வியையே பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது என்பதையே அம்மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 81 தொகுதிகளில் நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்து 34 இடங்களில் வென்றது; அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 3 இடங்களிலுமாக மொத்தம் 24 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது முதலே கடந்த 24 ஆண்டுகளில் ஆளும் கட்சி அடுத்த தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்க வைத்திருப்பது தற்போதுதான் முதல் முறையாகும்.
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் 28 பழங்குடி சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 28-ல் 27 இடங்களை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியே கைப்பற்றி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வாக்கு வங்கியே பழங்குடி மக்கள்தான். இந்த இரும்புக் கோட்டையைத் தகர்க்கத்தான் லவ் ஜிஹாத்.. லேண்ட் ஜிஹாத் என்கிற முழக்கங்களை பாஜக பழங்குடிகளிடையே முன்வைத்தது.
அதாவது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிகள் மக்கள் தொகை அதாவது இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துவிட்டது; இதற்கு காரணம் மேற்கு வங்கம் வழியாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்கள்தான். வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அனுமதித்துக் கொண்டிருக்கிறது; அப்படி ஊடுருவும் முஸ்லிம்கள் பழங்குடி பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களது நிலத்தை அபகரிக்கின்றனர் என்பதுதான் பாஜக முன்வைத்த லவ் ஜிஹாத்.. லேண்ட் ஜிஹாத் கோஷம். அத்துடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்களான முஸ்லிம்களை வெளியேற்றுவோம் எனவும் அதீதமாக முழங்கியது பாஜக. இந்த முழக்கத்தை ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் ஒட்டுமொத்தமாகவே நிராகரித்துவிட்டனர். இதனால் பழங்குடிகளிடையே பாஜகவால் 'ஊடுருவ' முடியாமல் போனது. பாஜக அமல்படுத்த நினைத்த லவ் ஜிஹாத்.. லேண்ட் ஜிஹாத் ஆபரேஷன் ஜார்க்கண்ட்டில் பரிதாபமாக தோல்வியில் முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications