நீதிபதி வர்மா வீட்டில் பண மூட்டை விவகாரம்.. பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையை தொடங்கிய மத்திய அரசு!
டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கான கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அங்கிருந்த மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன. இவையனைத்தும் கணக்கில் வராத பணம் என்று தெரியவந்தது.

இந்த சம்பவத்தின் போது நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டில் இல்லை. நீதிபதி வீட்டில் இவ்வளவு கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பான புகார்களை நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்தார்.
இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணம் ஆனது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதை ஏற்காமல் அவர் முரண்டு பிடித்தார்.
அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்தது. இருப்பினும், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை துவங்கவில்லை. இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்திற்கான கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. பல முக்கிய அரசியல் கட்சிகள் இந்த முயற்சியை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
கையொப்பங்களைப் பெறும் செயல்முறை விரைவில் தொடங்கும் என்றாலும், இந்த தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மக்களவைக்கு குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கு குறைந்தது 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. எதிர்வரும் கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், உடனே இது ஒரு முடிவை எட்ட வாய்ப்பில்லை.
நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 இன் கீழ், ஒரு நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், குற்றச்சாட்டுகளை விசாரிக்க தலைமை அதிகாரி மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்த விசாரணைக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பொறுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி பறிக்கப்படுமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications