ஆளுநருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொன்ன மிக முக்கிய கருத்து! வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: கும்பகோணத்தில் மாஜி முதல்வர் கருணாநிதி பெயரிடப்பட்ட 'கலைஞர் பல்கலைக்கழகம்' நிறுவுவது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, இந்த வழக்கை விசாரிப்பதாகச் சொல்லி சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்பு எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுநரே வேந்தராக இருந்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்கே வழங்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை மாற்றும் வகையிலும், தமிழக அரசுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் விவகாரம்
இருப்பினும், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அந்த மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், மசோதாக்களில் முடிவெடுப்பது தொடர்பாகக் காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இது அப்போது நாடு முழுக்க பேசுபொருளானது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் எளிய மக்களின் துயர் துடைத்த கருணாநிதி பெயரில் தமிழகத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் ஆதரவளித்தன. இதையடுத்து அன்றைய தினமே கருணாநிதி நினைவாகக் கும்பகோணத்தில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஒப்புதல் அளிக்கவில்லை
இது தொடர்பான தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மாநில நிதியுதவி பெறும் பல்கலைக்கழகம் என்பதால் இதற்கு முதல்வரே வேந்தராக இருப்பார் எனக் கூறப்பட்டு இருந்தது. துணை வேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, தமிழக அரசு நிறுவும் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.
இருப்பினும், ஆளுநர் ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. இந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இப்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஆளுநர் ரவிக்கு எதிராகவும் குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைத்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
அந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி காவாய் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "எங்கள் தரப்பு வாதத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.. கடந்த 2015 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களும் 381 மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு மசோதாவுக்கும் வழக்கு தொடர வேண்டுமென்றால், உச்சநீதிமன்றம் அதற்கென தனியாக இரண்டு அமர்வுகளை அமைக்கப்பட வேண்டும்" என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என்றும் ஆளுநர் ஒருவர் நீதிபதி போன்று செயல்பட முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.
சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து
இரு தரப்பு வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி கவாய், ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தார். அதாவது மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கால நிர்ணயம் செய்த உத்தரவுக்கு எதிராகக் குடியரசுத் தலைவர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளதாகவும் அதன் பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாகவும் கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications