ஓ ED அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறையா.. இதுவரை எத்தனை பேர் கைதாகியிருக்காங்க.. கபில் சிபல் காரசாரம்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஒருவரை தவறாக கைது செய்ததாக இதுவரை எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சரியே, என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவரத்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து 3ஆவது நீதிபதி கார்த்திகேயனும் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன் என்றார். இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தில் கூறியதாவது: அமலாக்கத் துறையினர் காவல் துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத் துறையினர் எப்படி கைது செய்ய முடியும்.
ஒருவரிடம் விசாரணை செய்து வாக்குமூலத்தை பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. சட்டவிதிகளின்படிதான் கைது செய்யப்பட்டுள்ளோமா என்பதை கருத்தில் கொள்ளவும் அதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் செந்தில் பாலாஜிக்கு உரிமை இருக்கு என்றார்.
இந்த நிலையில் கபில் சிபலின் வாதம் இன்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தது. அப்போது கபில் சிபல் கூறுகையில் ஃபெரா வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் ரிமாண்ட் பெறவில்லை. காவல் துறை அதிகாரிகள் தான் போலீஸ் ரிமாண்ட் கோர முடியும். இங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகின்றனர். செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததே தவறு என்றார்.
அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறுகையில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் தவறான கைதிற்கு ஒரு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். எனவே இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்றார். அதற்கு கபில் சிபல் குறுக்கிட்டு, இதுவரை எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி இந்த வழக்கில் வெல்லட்டும் தோற்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனால் சட்டவிதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications