இந்தியா பொருளாதாரத்துக்கு வலுவான கட்டமைப்பு தேவை.. ரூ.2 லட்சம் கோடி முதலீட்டு தயாரான கரண் அதானி
டெல்லி: சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் தொடர்ச்சியான இடையூறுகள் ஏற்படும் சூழலில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க, வலிமையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுவான தளவாட (logistics) நெட்வொர்க்கும் அத்தியாவசியம் என அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாக இயக்குநர் கரண் அதானி வலியுறுத்தினார். வர்த்தகம், உற்பத்தி, பொருளாதார விரிவாக்கத்தை ஊக்குவிக்க, புதிய கட்டமைப்புத் திட்டங்களில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

டெல்லியில் நடந்த தலைமைத்துவ மாநாட்டில் பிரபல தொழிலதிபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானியின் மகன் கரண் அதானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: புவிசார் அரசியல் பதட்டங்களும், மாறிவரும் வர்த்தகப் பாதைகளும் சர்வதேச வர்த்தக நெட்வொர்க்குகளில் பலவீனமாக்கி உள்ளது.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிகழ்வுகள் ஹார்முஸ் ஜலசந்தி, சூயஸ் கால்வாய், மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய கடல்வழித் தடங்களில் உள்ள அபாயங்களை எடுத்துக்காட்டுகின்றன. இதனால், உலகளாவிய வர்த்தக விநியோ சங்கிலிகளை பாதிக்கும் இடையூறுகளுக்கு எதிராக நாடுகள் வலுவான தளவாட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.
அதானி குழுமம் உருவாக்கிய கட்டமைப்புத் தளங்கள், இந்தியாவின் வர்த்தகம், தளவாடம், எரிசக்திப் பாதுகாப்பிற்கு உதவும் தேசிய சொத்துக்களாகச் செயல்படுகின்றன. 2020 முதல் கோவிட்-19 மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் போன்றவை தொடர்ச்சியான உலகளாவிய வர்த்தக விநியோக சங்கிலிகளை பாதித்தன. இதனால் பொருளாதார நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் மேம்படுத்த, ஒருங்கிணைந்த கட்டமைப்பு மற்றும் வலுவான தளவாட அமைப்புகளை உருவாக்குவதில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் .
அதானி குழுமத்தின் கட்டமைப்பு உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது. துறைமுகங்கள், தளவாடங்கள், எரிசக்தி, விமான நிலையங்களில் அதன் தளங்களை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியாவின் வர்த்தகம், உற்பத்தி, பொருளாதார விரிவாக்கத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இன்று கட்டப்படும் சொத்துக்கள் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும்.
இந்தியாவின் மிகவும் திறமையான தளவாட வழங்குனராகவும், குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும், வலுவான பெருநிறுவன ஆளுகையுடன் திகழ்வதே அதானி குழுமத்தின் நீண்டகால இலக்காகும். தளவாட செலவுகளைக் குறைப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. துறைமுகங்கள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், விமான நிலையங்கள், தளவாட அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், விநியோகச் சங்கிலித் திறனை கணிசமாக மேம்படுத்த முடியும்.
அதானி குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய கட்டமைப்புத் திட்டங்களில் ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வழித்தடம், விமான நிலையங்கள், தளவாட நெட்வொர்க், டேட்டா மையங்கள் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கி இருக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் முக்கிய பகுதியாக இருக்கும்.
பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சிமென்ட், அலுமினியம், தாமிரம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி போன்ற பிற துறைகளிலும் அதானி குழுமம் விரிவடைந்து வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில், அதன் விமான நிலைய வலையமைப்பு முழுவதும் பயணிகள் கையாளுதல் திறனை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனிலிருந்து சுமார் 200 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின்ஹைஃபா துறைமுகம் உட்பட சர்வதேச சொத்துக்களை இயக்கும் APSEZ நிறுவனம், உலகளாவிய வர்த்தக முறைகளுக்கும், அவற்றின் மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது விநியோகச் சங்கிலிகளின் தாங்கும் சக்தியை (resilience) மேம்படுத்த, பிராந்தியமயமாக்கல் நோக்கி நகர்கிறது.
2030 ஆம் ஆண்டுக்குள், அதானி குழுமத்தின் துறைமுகத் திறனை 600 மில்லியன் மெட்ரிக் டன்களிலிருந்து 1,200 மில்லியன் மெட்ரிக் டன்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 18 கிகாவாட்டிலிருந்து (GW) 50 கிகாவாட்டாகவும், அனல் மின் உற்பத்தித் திறன் 17 கிகாவாட்டிலிருந்து 45 கிகாவாட்டாகவும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகம், அளவு ஆகியவை முக்கியம் என்றாலும், பொறுப்புணர்வும் அவசியம். மேலும் ஒவ்வொரு திட்டங்களும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்தப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் தனது தலைமைத்துவ பண்பு வளர முக்கிய காரணம் தனது பெற்றோர் தான் என்று அவர் கூறினார். தனது தந்தையும் அதானி குழும தலைவர் கவுதம் அதானி தான் தனக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதாரங்கள் போன்ற துறைகளில் அதானி அறக்கட்டளை மூலம் டாக்டர் ப்ரீட்டி அதானியின் பங்களிப்பையும் பற்றி பெருமையாக கூறினார்.












Click it and Unblock the Notifications