காவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டது என்ன? துரைமுருகன் டெல்லியில் விளக்கம்
டெல்லி: கர்நாடகாவிடம் போதுமான தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தரமறுக்கிறது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா மதிப்பதில்லை. கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் நீர் பங்கிட்டு விவகாரத்தை முடிக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் இன்றைய தினம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுவார்கள் என்றும் அப்போது காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்துவார்கள் என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்போது 12 தமிழக எம்பிக்களும் சந்தித்தனர். அப்போது தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் முறையிட்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு துளியும் இல்லை. கர்நாடகாவிடம் போதுமான தண்ணீர் இருந்து தமிழகத்திற்கு தரமறுக்கிறது. உத்தரவுகளை கர்நாடகா முறையாக பின்பற்றவில்லை என ஷெகாவத்திடம் முறையிட்டோம். ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications