அஜய் ரஸ்தோகி குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள்! 2 பேரும் தமிழர்களாக இருக்க கூடாது! உச்சநீதிமன்றம்
டெல்லி: கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில் ரோடு ஷோக்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தனிநபர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தவெக குறித்தும் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
மேலும் இந்த வழக்கில் கரூர் போலீஸார் விசாரணைக்கு தடை விதித்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐடி விசாரணையை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடந்தது. அப்போது தவெக சார்பில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், "அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி" என கூறினார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா இந்த வழக்கின் மீதான தீர்ப்பை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடுகிறோம்.
அந்த குழுவில் தமிழகத்திலிருந்து இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருத்தல் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications