"காஷ்மீர் பண்டித்களுக்கு தேவை மறுவாழ்வு தான்..வெறும் திரைப்படம் இல்லை" விளாசும் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இதற்கு மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளன.
அதேநேரம் மறுபுறம் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்தப் படத்தை விமர்சிக்கும் வகையிலேயே அணுகி வருகின்றன. இது பிரசார படம் எனறே பலரும் சாடியுள்ளனர்.

காஷ்மீர் பண்டிட்கள்
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், "காஷ்மீரில் பெரும் சோகம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 32 வருடங்கள் ஓடிவிட்டன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவர்களிடம் நாங்கள் உங்களுக்காக ஒரு படம் தயாரித்தோம் என்று காஷ்மீரி பண்டிட்களிடம் இந்த அரசு சொல்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு வேண்டியது மறுவாழ்வு தானே தவிரத் திரைப்படம் இல்லை.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாகச் சிலர் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரை, இந்தத் திரைப்படம் முக்கியமில்லை. இது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். நீங்கள் எந்த காஷ்மீரி பண்டிட்டிடமும் கேளுங்கள், அவர்களுக்குத் தேவை மறுவாழ்வு தான். பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அவர்கள் ஏன் இன்னும் (காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு) மறுவாழ்வு அளிக்கவில்லை?

ஆம் ஆத்மி அரசு
டெல்லியில் இருக்கும் அனைத்து காஷ்மீரி பண்டிட்டுகளுக்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். 1993இல், டெல்லி வந்த காஷ்மீரி பண்டிட்டுகள் ஒப்பந்த ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தனர். தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களாகவே அவர்கள் பணியாற்றி வந்தனர். இடையில் பாஜக காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தன. இருப்பினும், யாரும் அவர்களை நிரந்தரம் செய்யவில்லை. நாங்கள் தான் இந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தோம். பாஜக அங்கு நாடகம் நடத்தி வருகிறது" என்றார்.

வரி விலக்கு
முன்னதாக கடந்த வாரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரி விலக்கு வழங்குவது தொடர்பாகப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "இந்தப் படத்தை யூடியூப்பில் போடச் சொல்லுங்கள். அனைவரும் இலவசமாகப் பார்க்கட்டும். திரைப்படத்திற்கு வரி விலக்கு எதற்கு? பாஜக தொண்டர்கள் செம்மறி ஆடுகளைப் போல நடந்து கொள்வதை நிறுத்துங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு வாருங்கள். உங்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்கும். உங்களை ஏமாற்ற மாட்டோம். உங்களைப் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications