காஷ்மீரில் கல்யாண சீசனையே காலி செய்த தங்கம்.. நகை வாங்குவது குறைந்தததால் நகைக்கடைகள் கவலை
டெல்லி: தங்க விலை உயர்வின் தாக்கத்தால் காஷ்மீரின் திருமண சீசன் மந்தமாகி உள்ளது. நகைகளை வாங்குவதை பல குடும்பங்கள் குறைத்துள்ளன. திருமணத்தின் போது அதிக அளவில் தங்க நகை போடுவது காஷ்மீரின் கலாச்சாரமாக இருக்கிறது. காஷ்மீரை பொறுத்தவரை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கும். அப்போது அதிகம் பேர் தங்கம் வாங்குவார்கள். ஆனால் பல குடும்பங்கள் நகைகள் வாங்குவதைக் குறைத்துள்ளதால், நகைக்கடைகளில் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
காஷ்மீர் சமூகத்தில் தங்க நகைகள் வெறும் அலங்காரமாக மட்டுமில்லை,.. அவை கலாச்சார மற்றும் பாரம்பரிய மற்றும் சடங்குகளின் அங்கமாக இருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணச் சடங்குகளின்போது, குடும்பங்கள் தங்க நாணயங்களையும், பெரிய அளவில் தங்க நகைகளையும் பரிமாறிக் கொள்வது பாரம்பரியமாகவே கட்டாயமான வழக்கமாக இருக்கிறது.

குறிப்பாக திருமணத்தில் தங்க நாணயங்களைப் பரிமாறிக் கொள்வது மிகவும் முக்கியமான ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. தங்க நகை என்பது மணப்பெண்ணின் குடும்பத்திற்குப் பொருளாதாரப் பாதுகாப்பாகவும் (Security), சமூகத்தில் கௌரவம் மற்றும் அந்தஸ்தை (Social Status) வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகவும் காஷ்மீர் மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
திருமணத்தின் போது நகை வாங்குவது அதிகமாக இருக்கும் என்பதால், நகை வியாபாரிகள், நகை செய்யும் தொழிலாளிர்கள் மற்றும் துணைத் தொழில்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு தொழில்கள் இயங்குகின்றன. பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக திருமணங்கள் நடக்கும். இந்த மாதங்களில் நகைக்கடைகள் வழக்கமாகக் களைகட்டி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேவை குறைந்துள்ளதால், பண்டிகை கால உற்சாகமின்றி இருந்தது.
காஷ்மீர் அனைத்து தங்க வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பஷீர் அஹ்மத் ராதர் கூறுகையில், இந்த ஆண்டு கல்யாண சீசனில் தங்க நகை விற்பனை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. தங்க விலை உயர்வு காரணமாகவே குடும்பங்கள் வாங்குவதைக் குறைத்திருக்கின்றன. இது எங்கள் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது,
காஷ்மீரில் அதிக திருமணம் நடந்த செப்டம்பரில் தங்கம் விலை உச்சமாக இருந்தது. செப்டம்பர் 10 அன்று, இந்தியாவில் தங்கத்தின் விலைகள், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹11,051 என்ற அளவில் அல்லது 10 கிராமுக்கு சுமார் ₹1.10 லட்சம் என்ற அளவில் வர்த்தகம் ஆனது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹10,130 ஆகவும், 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹8,288 ஆகவும் இருந்தது. ஆனால் நவம்பர் 5ம் தேதி நிலவரப்படி இன்றைக்கு தங்கம் விலை ஒருகிராம் 11135 ஆக இருக்கிறது. ஒரு சவரன் 89,080க்கு விற்பனையாகிறது.
ஸ்ரீநகரில் உள்ள ஹரி சிங் ஹை ஸ்ட்ரீட் சந்தையில் உள்ள நகை வியாபாரிகள் கூறுகையில், கல்யாண சீசனின் போது, வாடிக்கையாளர்கள் இப்போது எடை குறைந்த ஆபரணங்களையோ அல்லது வெள்ளி மாற்றுகளையோ தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணம் செய்யவிருக்கும் மணப்பெண்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்தாலும், குடும்பங்கள் பட்ஜெட்டை இறுக்கி உள்ளன. முழு செட்களுக்குப் பதிலாக, அவர்கள் இப்போது சில சிறிய நகைகளுடன் திருப்தி அடைந்து கொள்கிறார்கள். முன்கூட்டியே செய்யப்பட்ட நகை ஆர்டர்களும் குறைவாக வேண்டும் என்று கேட்கிறார்கள். அல்லது கேன்சல் செய்துவிடுகிறார்கள் என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தார்கள். 50 முதல் 60 சதவீதம் அளவிற்கு தங்க நகை விற்பனை சரிவடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications