ரயில்களில் மீண்டும் கட்டணச் சலுகை வழங்குக! நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த கதிர் ஆனந்த் எம்.பி.!
டெல்லி: கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி.கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று ரயில் சேவைகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக விதி எண் 377 கீழ் வலியுறுத்தினார்.
அவர் பேசிய விவரம் வருமாறு;

ரயில் சேவை
''இரயில்வே என்பது நமது நாட்டு மக்களின் உயிர்நாடி ஆகும். குறிப்பாக ஏழை எளிய மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பயணத்திற்கு இரயில் சேவையையே அதிகம் நம்பியுள்ளனர். மார்ச் 2020 முதல் நாடு தழுவிய கோவிட் 19 லாக்டவுன்/முழு அடைப்புக்கு பின்னர், ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் கட்டணச் சலுகைகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது ஏற்புடையது அல்ல.''

கட்டணச் சலுகை
''மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், புற்றுநோய் நோயாளிகள், பத்திரிகையாளர்கள் என 53 வகையினர்களுக்கு இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கி வந்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் முறையே 50% மற்றும் 40% சலுகைகள் வழங்கப்பட்டன. பார்வையற்றோர்க்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் 100% சலுகைகள் வழங்கப்பட்டன.''

அதிகப் பணம்
''ஏழைப் பயணிகள் குறைந்த தூரம் ரயிலில் பயணம் செய்யக் கூட அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த ஒன்றிய அரசு துளியும் கவலைப்படவில்லை. இதனால் முதியோர்களும், உடல் ஊனமுற்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை மோசமாக்கும் வகையில், ரயில் சேவையை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் ஆர்வமாக உள்ளது, அதிக முனைப்பு காட்டுகிறது. இதனால் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது ஏழை எளிய சாமானிய மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்துகிறது.''

சிறப்பு ரயில்கள்
''எனவே, ரயில்வே நிர்வாகம் வழக்கமான ரயில் சேவைகளை 100% மீட்டெடுக்கவும், சிறப்பு ரயில்களில் கட்டணத்தை குறைக்கவும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துகிறேன். ஒன்றிய அரசு லாக்டவுனை திரும்பப் பெற்று ஓராண்டு ஆகியும் ரயில் சேவைகள் இன்னமும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. மேலும் ஏழைப் பொது மக்களுக்கு துயரங்களைச் சேர்க்கும் வகையில் 70% ரயில்களை அதிகக் கட்டணத்துடன் சிறப்பு ரயில்களாக அரசு இயக்குகிறது.''












Click it and Unblock the Notifications