அதிரும் தலைநகர் டெல்லி! இலவச மின்சாரம் முதல் சீன ஆக்கிரமிப்பு வரை.. கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்கள்
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார்.
கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை தான் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த நிலையில், உடனடியாக தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே பாஜகவை விமர்சித்துப் பேச தொடங்கிவிட்டார்.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசின் 10 முக்கிய உத்தரவாதங்களை முன்வைத்தார்.
மோடி கியாரண்டி vs கெஜ்ரிவால் கியாரண்டி: இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,"பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஆனால், எனது வாக்குறுதிகள் எல்லாம் சாதனையாக மாறியுள்ளன. எனவே மக்கள் நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்களுக்கு கெஜ்ரிவால் கியாரண்டி வேண்டுமா இல்லை மோடி கியாரண்டி வேண்டுமா என்பதை மக்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார்.
கெஜ்ரிவால் மொத்தம் 10 உத்தரவாதங்களை முன்வைத்துள்ளார். அந்த உத்தரவாதங்களில் முதன்மையானது, அனைவருக்கும் இலவச மின்சாரம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கவரும் வகையில் இந்த இலவச மின்சாரம் வாக்குறுதியை அவர் முன்வைத்துள்ளார். மேலும், டெல்லியில் எப்படி தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறதோ.. அதேபோல நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றார்.
10 உத்தரவாதம்: கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், "உங்களிடம் மொத்தம் 10 உத்தரவாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதல் உத்தரவாதம், நாட்டில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவோம். நாட்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது, நமது தேவை 2 லட்சம் மெகாவாட் தான்.. அதாவது தேவையை தாண்டியே நாம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். அப்படி பார்த்தால் மின் தடை இருக்கவே கூடாது. நாங்கள் டெல்லி மற்றும் பஞ்சாபில் செய்ததை நாடு முழுக்க செய்வோம்.
மேலும், நாங்கள் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம், அதற்கு ₹ 1.25 லட்சம் கோடி செலவாகும். அதை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அடுத்து இரண்டாவது உத்தரவாதம் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவோம். இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் கோடி தேவைப்படும். மத்திய அரசும் மாநில அரசும் தல ரூ.2.5 லட்சம் கோடியைத் தர வேண்டும்.
மருத்துவம்: நம் நாட்டில் அரசு மருத்துவமனையின் நிலை மோசமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு மருத்துவமனை மூலம் சிறந்த மருத்துவத்தைத் தருவதே எங்கள் மூன்றாவது உத்தரவாதம்.. ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும். மாவட்ட மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும். அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும்.

நமது தாய் நாடு அனைவரையும் விட மேலானது.. நமது நிலத்தைச் சீனா ஆக்கிரமித்துள்ளது ஆனால் மத்திய அரசு அதை மறுக்கிறது... நமது ராணுவத்தின் பலம் அதிகம். சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் அனைத்து நிலங்களையும் மீட்போம். இதற்காகப் பேச்சுவார்த்தை, ராணுவ நடவடிக்கை என விரும்பிய நடவடிக்கையை எடுக்க ராணுவத்திற்குப் பூரண சுதந்திரம் வழங்கப்படும்.
அக்னிவீர்: அக்னிவீர் திட்டம் ராணுவத்திற்கு மோசமாக இருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் இளைஞர்களையும் பாதிக்கிறது. எனவே, இந்தத் திட்டம் முழுமையாக அகற்றப்படும்.. இது 5ஆவது உத்தரவாதம்.. அடுத்து நமது விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வோம். இது ஆறாவது உத்தரவாதம்.
ஏழாவது உத்தரவாதம் டெல்லி மக்களுக்கானது. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்த உடன் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அடுத்து நாடு முழுக்க இப்போது வேலையில்ல திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆண்டு தோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அதுவே எங்கள் 8ஆவது உத்தரவாதம்.
ஊழல் ஒழிப்பு: ஊழலை ஒழிப்பதே எங்களின் 9வது உத்தரவாதம். பாஜக தான் இந்த நாட்டில் ஊழலுக்கு மிகப்பெரிய காரணம். ஊழல்வாதிகளுக்கு ஏற்ப இருக்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் அகற்றுவோம்.. நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்போம்.. கடைசியாக 10ஆவது உத்தரவாதம் சரக்கு மற்றும் சேவை வரியை எளிதாக்குவது. இதன் மூலம் சீனாவையே நாம் தொழில்துறையில் மிஞ்சிவிடலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications