"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது
டெல்லி: கேரளாவில் சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. குறிப்பாக ராகுல் காந்தி கேரளா தேர்தலில் நேரடியாகக் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேரள தேர்தல் தொடர்பாக லேட் நைட்டில் நடந்த மீட்டிங் அதைத் தொடர்ந்து நடந்த சில முக்கிய சம்பவங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எந்தவொரு ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் அது இரவு 10.30 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும். ஆனால், இந்த வாரம் வழக்கத்திற்கு மாறான சில நடவடிக்கைகள் அங்கு இருந்தன. குறிப்பாகக் கடந்த புதன்கிழமை முதலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் பல கார்கள் நுழைந்தன.

கேரளா
கேரளா சட்டசபைத் தேர்தலுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை 55 தொகுதிகளுக்குக் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்த சூழலில் புதன்கிழமை இந்த கூட்டம் நடந்தது. முதலில் என்ன கூட்டம் எனத் தெளிவாகத் தெரியாத சூழலில், அதன் பிறகே காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அவசரமாக கூடியது தெரிய வந்தது. அதற்கு முக்கிய காரணமே கேரள சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் தான். வேட்பாளர் தேர்வு குறித்து ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
லேட் நைட் மீட்டிங்
மாநில தலைவர்கள் பரிந்துரைகள் தவிர்த்து, சாதி, வெற்றி வாய்ப்பு, தேர்தல் வரலாற்றுப் பதிவுகள் என அனைத்தையும் வைத்தே வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இரவு 10:30 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் அதிகாலை 2:30 மணி வரை நீடித்தது. இந்த நீண்ட அமர்வில், ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வேட்பாளர்களை விரிவாக ஆய்வு செய்தனர். தற்போதைய எம்பிக்கள் யாருக்கும் சட்டசபைத் தேர்தலில் சீட் தர வேண்டாம் என முடிவு எடுத்ததாக தெரிகிறது.
காங்கிரஸில் இதுபோல நள்ளிரவில் கூட்டம் நடத்துவது ரொம்பவே அரிது. பாஜகவில் எப்போதும் தேர்தல் காலங்களில் இதுபோல லேட் நைட் கூட்டங்கள் நடக்கும். பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால், காங்கிரஸில் இதுபோல கூட்டம் நடத்துவது அரிது. இது கேரளத் தேர்தல்களுக்குக் காங்கிரஸ் அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
வேட்பாளர்கள்
கேரள தேர்தலில் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு நெருக்கமானவர்களே அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 55 வேட்பாளர்களுக்கான முதல் பட்டியலில், கே.சி. வேணுகோபால் ஆதரவாளர்கள் 17 பேரின் பெயர்கள் உள்ளது. ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்கள் 9 பேர், வி.டி. சதிசன் ஆதரவாளர்கள் 5 பேருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதுபோக பல எம்.பி.க்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். சசி தரூர் தனது ஆதரவாளர்களுக்குத் தொகுதி கேட்கவில்லை, வேட்பாளர் தேர்வில் பெரிதாகத் தலையிடவும் இல்லை.
அதேநேரம் மாநில தலைவர்கள் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தாலும் கூட கள ஆய்வு முடிவுகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் கருத்துகள் போன்ற ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்தே இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
ராகுல் திட்டவட்டம்
இந்த வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்பி யாருக்கும் சீட் தரப்படவில்லை. இருப்பினும், முதலில் கே. சுதாகரன், அடூர் பிரகாஷ், ஷாஃபி பரம்பில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கேரள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்தனர். ஆனால், ராகுல் இதை ஏற்க மறுத்துவிட்டார். எம்பிக்கள் போட்டியிட்டால் இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றும் இது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் ராகுல் காந்தி இதைக் கடுமையாக எதிர்த்தார்.
இதன் காரணமாகவே வியாழக்கிழமை வெளியான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் எம்பிக்கள் பெயர் இடம்பெறவில்லை. இந்த முறை கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக அதிருப்தி நிலவும் சூழலில், எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications