திராவிட நாட்டை உருவாக்க.. தமிழர்களை தூண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதிகள்! மத்திய உளவு துறை பகீர்
டெல்லி: கடந்த சில ஆண்டுகளாகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவரமாக எடுத்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், திட்டமிட்டு தனிநாடு கோரிக்கையைத் தூண்டிவிடுவதாக உளவுத் துறை தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழர்களைத் திராவிட நாடு கேட்கச் சொல்லியும் இந்த அமைப்பு தூண்டிவிட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதியைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் தான் காலிஸ்தான் தீவிரவாதிகள்.

காலிஸ்தான் அமைப்பு:
நமது நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இருப்பினும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்த தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டே வருகின்றன. அப்படி இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு தான் எஸ்.எஃப்.ஜே எனப்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இதன் தலைவராக குர்பத்வந்த் சிங் பன்னூன் இருக்கிறார்.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங், அமெரிக்கா & கனடா நாடுகளில் குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்து தனது அமைப்பை நடத்தியே வருகிறார்.
உளவுத் துறை தகவல்:
இதற்கிடையே இந்த நீதிக்கான சீக்கியர் அமைப்பைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதிகள், மணிப்பூரில் உள்ள முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத் தனி நாட்டு கேட்கச் சொல்லித் தூண்டிவிடுவதாக உளவு துறை தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தீர்ப்பாயத்தின் கீழ் வரும் உளவுத் துறை அளித்த ரிப்போர்ட்டில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பிரிவினைவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாகக் கூறி, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை குறிவைத்தும் சில பகீர் திட்டங்களை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
திராவிட நாடு:
உளவுத் துறை அளித்த அந்த ரிப்போர்ட்டில் மேலும், "உள்ள மற்ற சமூகங்களுக்கு எதிராகச் சிறுபான்மையினரை தூண்டிவிட்டு, வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு முயல்கிறது. இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான செயல்களில் அந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடுகிறது. மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவர்களைத் தனி நாடு கேட்கச் சொல்லி நீதிக்கான சீக்கியர் அமைப்பு தூண்டுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைத் திராவிட நாடு (Dravidstan) கேட்கச் சொல்லியும் இந்த அமைப்பு தான் தூண்டுகிறது.
நாட்டில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகப் போலியான கட்டமைப்பை உருவாக்கி உர்துஸ்தானை நாடு கோரிக்கையைத் தூண்டி விட முயல்கிறது. மேலும், இந்த நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு நமது நாட்டில் தலித்துகளும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகப் போலியான தகவல்களைப் பரப்பி, தங்கள் தனி நாடு கோரிக்கைகளுக்கு அவர்களிடம் இருந்தும் ஆதரவைப் பெற முயல்கின்றன. விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போது பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளைத் தூண்டிவிடுவதிலும் இந்த அமைப்புக்குப் பங்கு இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவம் & போலீஸ்:
இது மட்டுமின்றி, இந்த நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பினர் ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் உள்ள சீக்கியர்களையும் தூண்டி விடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டர்கள், பயங்கரவாதிகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் உட்படப் பிற தீவிரப் பிரிவினருடன் இணைந்து நீதிக்கான சீக்கியர் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பைச் சேர்ந்தோர் மீது உபா உள்ளிட்ட சட்டங்களில் சுமார் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications