இன்று துரோக தினம் அனுசரிக்கும் விவசாயிகள் - மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புகார்
மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு கடந்த 2020 ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் குவிந்தனர். டிராக்டர்களுடன் ஓராண்டுகளுக்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனியிலும், கடும் மழையிலும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் பலர் உயிரிழந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தை உணர்ந்த மத்திய அரசு கொண்டு கடந்த நவம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களையும் கடந்த ஆண்டு திரும்ப பெற்றது. அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வாபஸ் பெற்றனர். ஆனால் இந்த வாக்குறுதிகளை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் அவர்கள் துரோக தினம் அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசின் கவனத்தை கவர விவசாயிகள் இன்று துரோக தினத்தை அனுசரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications