அரசியல் அழுத்தம் இருக்கு.. கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் விலகும் சிபிஐ? விளக்கம்
டெல்லி: நாட்டையே உலுக்கி உள்ள கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் பலாத்கார கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அரசியல் தலையீடு மற்றும் அழுத்தம் காரணமாக சிபிஐ தனது விசாரணையில் இருந்து விலகி கொள்ள வேண்டும் என்று அதிகாரி சார்பில் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றி சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 9 ம் தேதி நடந்தது. அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தன.

இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கடந்த 17 ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தான் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக கைதான சஞ்சய் ராயை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. அந்த கடிதம் என்பது கொல்கத்தா குற்றப்பிரிவு இணை இயக்குநர் (டிஐஜி) டாக்டர் ஆகாஷ் நாக் என்பவரின் பெயரில் மத்திய உள்துறையின் செயலாளருக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் என்பது சிபிஐ-க்கான சிம்பலுடன் எழுதப்பட்டதாக இருக்கிறது.
அதில், ‛‛கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கு விசாரணையை திரும்ப பெற வேண்டும். இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை. இந்த வழக்கை விசாரிப்பதில் அரசியல் அழுத்தம் மற்றும் சமூகம் சார்ந்த அழுத்தம் உள்ளது. இதனால் சிபிஐ விசாரணையில் இருந்து விலகி கொள்ள வேண்டும்'' என்பன போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கடிதம் என்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கடிதமும் சர்ச்சையானது. இந்நிலையில் தான் கடிதம் தொடர்பாக சிபிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் கொல்கத்தா குற்றப்பிரிவு இணை இயக்குநர் (டிஐஜி) டாக்டர் ஆகாஷ் நாக் என்பவர் எழுதியதாக கடிதம் ஒன்று பரவி வருகிறது. இவர் சிபிஐயில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபிஐயில் ஆகாஷ் நாக் என்ற பெயரில் எந்த அதிகாரியும் இடம்பெறவில்லை.
மேலும் அந்த கடிதத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. இதனால் அனைவரும் இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ தனக்கே உரித்தான பாணியில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தும்'' என கூறப்பட்டுள்ளது. இதுதவிர இப்படி தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஐ தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications