ரயில்வே நியமன ஊழல் வழக்கு..தேஜஸ்வி யாதவ், மிசா பார்தியிடம் மத்திய அமைப்புகள் கிடுக்கிப்பிடி விசாரணை
டெல்லி: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் விதிகளை மீறி வேலை வழங்கி அதன் மூலம் நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவ் இன்று சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜரானார். அதேபோல், மிசா பார்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்து வந்தார்.
இவரது பதவி காலத்தில் ரயில்வே துறையில் வேலை வழங்க நிலம் பெற்று மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமலாக்கத்துறை விசாரணை
அதாவது, ரயில்வேயில் வேலை பெறுபவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் லாலுபிரசாத் யாதவ் பதிவு செய்துள்ளார். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்
லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, இளைய மகனும், பீகாரின் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பணி நியமன ஊழல் தொடர்பாக நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே முறை தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில்,அவர் ஆஜராகமால் இருந்தார்.

விசாரணைக்கு ஆஜர் ஆன யாதவ்
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ரயில்வே பணி நியமன ஊழல் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தலாம் என தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக தேஜஸ்வி யாதவை இந்த மாதம் கைது செய்ய மாட்டோம் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்து இருந்தது.

ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்
எனவே தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை. தேஜஸ்வி யாதவ் வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருப்பதால் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே, இதே வழக்கில் லாலுபிரசாத் யாதவின் மகளும் தேஜஸ்வி யாதவின் சகோதரியுமான மிசா பார்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மிசா பார்தி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கில் தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி ஒரே நாளில் மத்திய விசாரணை அமைப்புகள் முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications