ஜெயிலில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயிக்கு ரூ. 40 லட்சம் செலவு.. அடேங்கப்பா இவ்வளவு சொத்தா
டெல்லி: மகாராஷ்டிராவின் பிரபல அரசியல்வாதியான பாபா சித்திக் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கேங்ஸ்டர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. பஞ்சாப்பில் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். சிறையில் உள்ள அவருக்கு ஆண்டுக்கு ரூ.35-40 லட்சம் செலவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மகாராஷ்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசியல் கொலை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அந்தக் கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பொறுப்பேற்றுள்ளது.

பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். சல்மானுடன் நெருக்கமாக உள்ள யாராக இருந்தாலும், இதே நிலைதான் என லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பகீர் வாக்கு மூலம் கொடுத்திருந்தனர். சிறையில் இருந்து கொண்டே லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
31 வயதாகும் லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் மாநிலத்தில், செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறையில் உள்ள லாரன்ஸ்க்கு அவரின் குடும்பம் வருடத்துக்கு ரூ.35 - 40 லட்சம் செலவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லாரன்ஸின் உறவினர் ரமேஷ் பிஷ்னோய் என்பவர் கூறுகையில், லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். அவன் இவ்வளவு பெரிய கிரிமினாலாக உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கு பணத்தில் எந்தக் குறையும் இல்லை.
லாரன்ஸின் அப்பா, ஹரியானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்கள் கிராமத்தில் அவருக்கு சொந்தமாக சுமார் 110 ஏக்கர் நிலம் உள்ளது. இப்போது கூட சிறையில் அவனுக்காக வருடத்துக்கு ரூ.35 லட்சம் - 40 லட்சம் செலவு செய்கிறார்கள். லாரன்ஸ் பிஷ்னோயின் இயற்பெயர் பல்கரன் ப்ரார் ஆகும். பள்ளி காலகட்டத்தில் அவனின் பெயர் லாரன்ஸ் என்று மாறியது. அழைப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக அவரின் அத்தை தான் லாரன்ஸ் என்று கூப்பிட தொடங்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும்போது, மாணவர் தேர்தலில் மோதல் வெடித்தது. அது கொலை முயற்சி வழக்கு வரை சென்றது. அவரின் தொடர்புகள் விரிவடைய தொடங்கின. அடுத்தடுத்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கிடைத்த கிரிமினல் நெட்வொர்க் மூலம், அவரின் கிரைம் ரேட் அதிகரித்தது. கொலை, கடத்தல், பணம் பறிப்பு என பெரிய இடத்து வழக்குகளில் சிக்கினார். போதை மருந்து, பாப் இசை நெட்வொர்க்கிலும் கோலோச்சி மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறினார். என்றார்.
தற்போது இந்தியா - கனடா இடையே நடைபெற்று வரும் பிரச்னைக்கும் லாரன்ஸ் முக்கிய காரணமாக உள்ளார். ரா போன்ற உளவு அமைப்புகளின் உதவியுடன் கனடாவில் கொலை, வன்முறை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
அதற்கு கனடா கடுமையாக எச்சரித்துள்ளது. கனடா அரசு லாரன்ஸ் பிஷ்னோய் பெயரை வெளிப்படையாக பயன்படுத்தியிருப்பது உலகளவில் லாரன்ஸ் நிழல் உலக தாதாவாக வலம் வந்திருப்பது தெரியவந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் மாநிலம், அகமதாபாத் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications