தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்? முக்கிய வழக்கில் நாளை தீர்ப்பளிக்கும் சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியே வருகிறார். பல நாடுகளில் அவர்களுக்கான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் போராடியே பெற வேண்டி உள்ளது.

காதலுக்கு எப்படிச் சாதி மதம் இல்லையோ அதேபோல பாலினமும் இல்லை என்பது அவர்கள் வாதம். இருப்பினும், அவர்களின் உரிமை எங்கும் எளிதாகக் கிடைப்பதில்லை. உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கூட 2003இல் தான் அங்கு நாடு முழுக்க தன்பால் ஈர்ப்பு என்பது சட்டப்படி குற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
தன்பாலின திருமணம்: அதேபோல இந்தியாவிலும் கூட கடந்த 2018 முதல் தன்பால் ஈர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை சார்ந்து வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு என தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருப்பதாகவே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தச் சூழலில் தன்பாலின திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தீர்ப்பு: இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்பது சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட உரிமைகள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையமும் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டது.
அதேநேரம் மத்திய அரசு, தேசிய குழந்தைகள் உரிமைகள் அமைப்பான என்சிபிசிஆர் மற்றும் ஜமியத்-உலமா-இ-ஹிந்த் அமைப்பு ஆகியவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் தான் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது.












Click it and Unblock the Notifications