டிபி மாத்துங்க.. சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி!
டெல்லி: 76-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முகப்பு படமாக (டிபி) வைக்க பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.

டெல்லி செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பிஎம் - கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல், அந்தந்த மாநிலங்களில், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் அஞ்சலகங்கள் மூலமாக தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரைக்கும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதனை https://harghartiranga.com இணைய தளங்களில் பதிவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி, அனைவரும் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். தனது சமூக வலைதள பங்களின் டி.பி-ஐயும் மாற்றியுள்ளார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "சுதந்திர நாளையொட்டி 'ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்புப் படத்தை தேசியக் கொடியாக மாற்ற வேண்டும். நமது நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றும் வகையில் இத்தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications