கிரிக்கெட்டுக்கு டோனி போல அரசியலுக்கு ராகுலாம்! ராஜ்நாத்சிங் சொன்னதுமே தொண்டர்கள் கொடுத்த ரியாக்ஷன்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பினிஷராக டோனி இருப்பதை போல அரசியலுக்கு ராகுல் காந்தி இருப்பதாக ராஜ்நாத்சிங் பேசினார். ராகுலை டோனியுடன் ஒப்பிட்டு பேசியதற்கான காரணத்தையும் கூடத்திலேயே பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் அப்போது, ராஜ்நாத்சிங், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
பெஸ்ட் பினிஷர் ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சிக்கும் ஊழலுக்கும் அசைக்க முடியாத தொடர்பு உள்ளது. பெரும்பாலான காங்கிரஸ் அரசு ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளன. ஆனால் பிரதமர் மோடி அரசாங்கத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஒரு காலத்தில் இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது’ என்றார். அப்போது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருந்த மக்களை பார்த்து ராஜ்நாத்சிங், இந்திய கிரிக்கெட் அணியில் பெஸ்ட் பினிஷர் யார் என்று கேட்டார். அதற்கு டோனி டோனி என அங்கிருந்தவர்கள் பதிலளித்தனர்.
காங்கிரஸ் கட்சியை அழிக்காமல்: கிரிக்கெட்டிற்கு தோனி இருக்கிறார்... அரசியலில் பெஸ்ட் பினிஷர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் ராகுல் காந்தியை தான் சொல்வேன். இதன் காரணமாகத்தான் பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை மொத்தமாக பினிஷ் செய்யும் வரை ராகுல் காந்தி ஓய மாட்டார்" என்றார். அப்போது பாஜக தொண்டர்கள் விசிலை பறக்க விட்டு ஆரவாரம் செய்தனர்.
5 ஆண்டுகளில் 2 முறை: தொடர்ந்து எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். 5 ஆண்டுகளில் இரண்டு முறை தேர்தல் நடைபெறும். ஒருமுறை நாடாளுமன்ற சட்டமன்றத்திற்கும் மற்றொரு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
இந்தியா சூப்பர் பவராக மாறும்: 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளரும் என்று பொருளாதார நிறுவனங்கள் கணித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதல் 5 இடத்திற்குள் வந்துள்ளது. 2045 ஆம் ஆண்டு இந்தியா சூப்பர் பவராக மாறும்.
ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் பாதியை நிறைவேற்றியிருந்தால் கூட இந்தியா இன்று சூப்பர் பவராக மாறியிருக்கும். ஆனால், மறுமுனையில் பாஜக தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.திருப்தி படுத்தும் அரசியல் நாட்டுக்கு நல்லது அல்ல.












Click it and Unblock the Notifications