தமிழகத்தில் 34..பாஜக மொத்தம் 501 தொகுதிகளில் போட்டியிட திட்டம்? காங்கிரஸ் 300 இடங்களில் களம் காணும்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தொகுதிகளில் போட்டியிடக் கூடும்; நாடு முழுவதும் மொத்தம் 501 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவும் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளான 'இந்தியா' கூட்டணியும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதில் முழு வீச்சில் இறங்கி உள்ளன.

2019-ம் ஆண்டு தேர்தல் கள நிலைமையை ஒப்பிடுகையில் 2024 லோக்சபா தேர்தல் களம் அடியோடு மாறி இருக்கிறது. 2019 தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது 435. இதில் 303 இடங்களில் வென்றது.
ஓடிப் போன கூட்டணி கட்சிகள்: 2019 லோக்சபா தேர்தலில் கை கோர்த்து நின்ற 4 முக்கியமான கூட்டணி கட்சிகள் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டன. பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம், தமிழ்நாட்டின் அதிமுக, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியவைதான் இந்த 4 முக்கிய கட்சிகள். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 35-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இதில் லோக்சபாவில் 10க்கும் மேற்பட்ட எம்.பிக்களைக் கொண்ட ஒரே கோஷ்டி சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணிதான்.
பீகாரில் பாஜக பரிதாபம்: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை முறித்த நிலையில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. ஆனால் கூட்டணியில் இருப்பதோ சிறு கட்சிகள்தான். இதனால் பீகாரில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது.
தென்னிந்தியாவும் பாஜகவும்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் பாஜக 1 இடம் பெறுவது என்பதே குதிரை கொம்புதான். ஆறுதலாக கர்நாடகா மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் சாத்தியம் உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி இல்லை என்கிற நிலையில் சிறிய கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கினால் கூட 39 தொகுதிகளில் 34 தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டிய கட்டாயம் உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் வலுவாக இருப்பதால் அங்கு பாஜக சொற்ப இடங்களில்தான் போணியாகும் நிலைமை உள்ளது.
பாஜகவுக்கு நெருக்கடி: இந்த பின்னணியில் ஆந்திராவில் 5 தொகுதிகள், பீகாரில் 17 தொகுதிகள், தமிழ்நாட்டில் 34 தொகுதிகள், பஞ்சாப்பில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் லோக்சபா தேர்தலில் இந்த முறை பாஜக நாடு முழுவதும் 501 தொகுதிகளில் போட்டியிடும் சாத்தியம் உள்ளது. பாஜக தலைமையில் பிரதான கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதால் எஞ்சிய 42 தொகுதிகளில்தான் கூட்டணி கட்சிகள் போட்டியிடும்.
காங்கிரஸ் கூட்டணி பலம் அதிகம்: இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி 2019- தேர்தலில் 543 தொகுதிகளில் 422-ல் போட்டியிட்டது. ஆனால் வெறும் 52 தொகுதிகளில்தான் வென்றது. அதே நேரத்தில் 2019 தேர்தலை ஒப்பிடுகையில் இந்த முறை காங்கிரஸின் கூட்டணி பலம் அதிபயங்கரமானதாகவும் உள்ளது. 28 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி தேர்தல் வரை நீடித்தால் காங்கிரஸ் கட்சி இந்த முறை குறைவான இடங்களில்தான் போட்டியிட முடியும்.
300 இடங்களில் காங். போட்டியிடும்?: டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இதனை குறிப்பிட்டிருந்தார். அதாவது காங்கிரஸ் கட்சி 300 இடங்களில் போட்டியிடட்டும். ஆனால் எஞ்சிய 243 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணியின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். அதாவது 243 தொகுதிகளில் பாஜக vs மாநில கட்சிகள் மோதும். அங்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவைத் தர வேண்டும் என்பதுதான் மமதாவின் வியூகம்.
காங்கிரஸ் செய்யுமா?: இதனடிப்படையில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்க மாநிலங்களில் சொற்பமான இடங்களில்தான் காங்கிரஸ் போட்டியிட முடியும். அதே நேரத்தில் சற்று கூடுதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் போட்டியிடலாம். கூட்டணி கட்சிகளுக்காக காங்கிரஸ் தமது பிடிவாதத்தை கைவிட்டு தொகுதிகளை தாரைவார்த்து கொடுப்பதுடன் தேர்தலில் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் லோக்சபா தேர்தல் களம் கடும் போட்டியானதாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications