பாஜகவை பயத்திலேயே வைக்கும் நிதிஷ் குமார்.. மோடி - அமித்ஷா எப்படி சமாளிக்க போகிறார்கள்? புது தலைவலி
டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காததால் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நம்ப வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை பயத்திலேயே நிதிஷ் குமார் வைப்பார் எனவும், அதனை மோடி - அமித்ஷா எப்படி சமாளிக்க போகிறார்கள்? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகின. இதில் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி இல்லை. அதிகபட்சமாக பாஜக 240 இடங்களில் வென்றுள்ளது. தனி மெஜாரிட்டிக்கு 272 எம்பிக்கள் தேவை. அப்படிப்பார்த்தால் பாஜகவுக்கு இன்னும் 32 எம்பிக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் தான் பாஜக தவிர்த்து அதன் கூட்டணி கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதில் அதிகபட்சமாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் ஜெயித்துள்ளது. அதேபோல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களில் ஜெயித்துள்ளது. இவர்கள் 2 பேரிடம் மட்டும் 28 எம்பிக்கள் உள்ளன. அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள பிற 12 கட்சிகள் 24 எம்பிக்களை வைத்துள்ளனர்.
இதனால் மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்றாலும், மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் உதவி பாஜகவுக்கு நிச்சயம் தேவை. இதனால் தான் அவர்கள் 2 பேரும் கிங் மேக்கர்களாக மாறி உள்ளனர். மேலும் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனையில் அவர்கள் பங்கேற்று என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கவும், மோடி மீண்டும் பிரதமராகவும் ஓகே சொல்லி உள்ளனர்.
இருப்பினும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பாஜக மேலிட தலைவர்களிடம் சில முக்கிய டிமாண்டுகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சந்திரபாபு நாயுடு லோக்சபா சபாநாயகர், 4 முதல் 6 கேபினட் அமைச்சர் பதவிகளையும், நிதிஷ் குமார் 3 கேபினட் அமைச்சர் பதவிகளையும் கேட்பதாகவும், பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு, நிதி, உள்துறை, சாலை போக்குவரத்து துறை இலாகாக்கள் மீது அவர்கள் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனர் பதவி மீது நிதிஷ் குமார் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவரது கட்சி சார்பில் இருந்து குரல் வந்துள்ளது. இது பாஜகவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி மாறலாம். ஏனென்றால் ‛இந்தியா' கூட்டணிக்கு 232 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் அங்கு செல்லும்போது ‛இந்தியா' கூட்டணியின் பலம் என்பது லோக்சபாவில் 260 ஆக மாறும். தனிப்பெரும்பான்மைக்கு மேலும் 12 எம்பிக்கள் தான் வேண்டும் எனும் போது பிற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை இழுத்து ‛இந்தியா' கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
இதனால் பாஜகவை பயத்திலேயே பீகார் முதல் நிதிஷ் குமார் வைக்கலாம் என கூறப்படுகிறது. இதனை பாஜக தலைமையும் நன்கு உணர்ந்துள்ளது. ஏனென்றால் நிதிஷ் குமார் பொதுவாகவே அடிக்கடி கூட்டணியை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டவர். கடந்த லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி அமையவே முக்கிய காரணமாக நிதிஷ் குமார் இருந்த நிலையில் அவர் அதன்பிறகு பாஜக பக்கம் தாவினார்.
இதனால் நிதிஷ் குமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அவர் மீண்டும் ‛இந்தியா' கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ‛இந்தியா' கூட்டணி உருவானபோது அதன் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அவர் குறிவைத்தார். ஆனால் அதனை தாமதமாக வழங்கியதால் அவர் கூட்டணியில் இருந்து எஸ்கேப்பானார். இதனால் பாஜகவும் அவரது கோரிக்கையை நிறைவேற்ற காலதாமதம் செய்யும் நிலையில் அவர் கூட்டணி மாறலாம் என சொல்லப்படுகிறது.
இதுபற்றி நிதிஷ் குமாருடன் நெருக்கமாக உள்ள கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‛‛நிதிஷ் குமார் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஆதரவு அளிப்பார். அவர் கூட்டணி மாற மாட்டார்'' என்றனர். ஆனாலும் பாஜக அதனை நம்புவதாக இல்லை. மேலும் ‛இந்தியா' கூட்டணி ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு கதவுகள் திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் கிங்மேக்கராக உள்ள நிதிஷ் குமார் பாஜகவை அச்சத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications