Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு 'அதிர்ச்சிகரமான வரலாற்று தோல்வியை' தந்த "அயோத்தி".. என்னதான் நடந்தது? பரபர கள தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'இந்திய அரசியலில்' பாஜக வேர்பிடித்து இன்றைக்கும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க காரணமே அயோத்தி ராமர் கோவில் விவகாரம்தான். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்ட 4 மாதங்களிலேயே அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் இருந்து வருகிறது.

1990களில் அயோத்தி ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்திதான் பாஜகவை நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார் அத்வானி. பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்த மத வன்முறைகளினூடே 'இந்துக்களின்' கட்சியாக நிலைப்படுத்திக் கொண்டது பாஜக. இதன் அறுவடைதான் வாஜ்பாயும் நரேந்திர மோடியும் நாட்டின் பிரதமர்களாக மணி மகுடம் சூட்டிக் கொண்டது.

lok sabha election 2024 ayodhya 2024

அயோத்தி ராமர் கோவில்: இந்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவிய 'அயோத்தி ராமருக்கு' நன்றி கடனாக மிகப் பிரம்மாண்ட கோவிலை கட்டி நேர்த்திக் கடனை செலுத்தியது பாஜக. ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு 4 மாதங்கள் கூட ஆகாத நிலையில்.. அயோத்தி நகரை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதி தேர்தலில் அதே பாஜகவின் வேட்பாளர் லல்லு சிங் 54,500 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார். லோக்சபா தேர்தலில் இதர 'தோல்வி'களைப் போல எளிதாக கடக்கக் கூடியது அல்ல. சரி அப்படி என்னதான் அயோத்தியில் நடந்தது? பாஜக எதற்காக வீழ்த்தப்பட்டது?

3 முக்கிய காரணங்கள்: அயோத்தியில் பாஜக படுதோல்வியை சந்தித்ததற்கு பொதுவாக சொல்லப்படுகிற காரணங்கள் 1) பாஜகவின் பிடியில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் தலித்துகளையும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 'வெற்றிகரமாக' பிரித்து தமது வாக்கு வங்கியாக மாற்றியது 2) அயோத்தி ராமர் கோவிலுக்காக கையகப்படுத்த நிலம் மற்றும் அகற்றப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் மோசடி செய்தது 3) பாஜகவின் டெல்லி மேலிடத்துக்கும் உ.பி. பாஜக தலைகளுக்கும் இடையேயான 'ஈகோ' மோதல் இவைதான் பாஜகவின் 'அயோத்தி' தோல்விக்கான பிரதானம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கொக்கரித்த பாஜகவின் லல்லு சிங்: அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியான இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளை பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி. பொதுவாக சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமான தொகுதி. இத்தொகுதியின் பாஜக வேட்பாளர் லல்லு சிங்தான், 400-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றால் அரசியல் சட்டத்தை திருத்தி எழுதுவோம் என மார்தட்டினார். இதனைத்தான் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மிகவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. லல்லு சிங் சொல்வதைப் போல பாஜக, 400க்கும் அதிகமான இடங்களைப் பெற்றால் அரசியல் சாசனத்தைத் திருத்தும்; தற்போதைய இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட்டு விடும்; இதர பிற்படுத்தப்பட்டோர்- தலித்துகள் அனுபவிக்கும் அத்தனை கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளும் பறிபோகும் என பதிலடி பிரசாரத்தை தீவிரப்படுத்தியது. இது ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்டோர்- தலித் வாக்குகளை சமாஜ்வாதி கட்சி பக்கம் இலகுவாகவே அணி திரட்டிவிட்டது.

பைசாபாத் தொகுதியும் தேர்தல்களும்: அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியானது காங்கிரஸ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி வெல்லக் கூடிய தொகுதிதான். பைசாபாத் தொகுதியில் பொதுவாக இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த வேட்பாளரை நிறுத்துவதைத்தான் அரசியல் கட்சிகள் வழக்காமக கடைபிடித்தன. பாஜகவும் கூட குர்மி எனப்படும் பிற்படுத்தப்பட்ட ஜாதியின் வினய் கட்டியாரை நிறுத்தி 3 முறை பைசாபாத்தில் வென்றிருக்கிறது. ஆனால் 2004-ல் ஓபிசி முகமான வினய் கட்டியாருக்கு பதில் உயர் ஜாதி லல்லு சிங்கை களமிறக்கி முதல் தோல்வியை சந்தித்தது பாஜக. அதே நேரத்தில் மோடி அலையால் 2014, 2019-லல்லு சிங்குக்கு பைசாபாத்தில் வெற்றியும் கிடைத்தது.

அகிலேஷ் யாதவின் அதிரடி சமூக நீதி வியூகம்: பைசாபாத் லோக்சபா தொகுதியில் ஓபிசி 22%; தலித்துகள் 21%; முஸ்லிம்கள் 18% வாக்காளர்களாக இருக்கின்றனர். பொதுத் தொகுதியான பைசாபாத்தில் தலித்துகளில் பாசி ஜாதியை சேர்ந்த அவதேஷ் பிரசாத்தை சமாஜ்வாதி கட்சி 'அக்னி பரீட்சையாக' களமிறக்கியது. அகிலேஷ் யாதவின் வியூகம் தப்பவில்லை. பைசாபாத் தொகுதியில் ஒட்டுமொத்த ஓபிசி, தலித், முஸ்லிம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் 'தலித்' வேட்பாளர் அவதேஷ் பிரசாத்துக்கு மொத்தமாக கிடைக்க பாஜகவின் லல்லு சிங் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் 'அயோத்தி ' மண்ணில்! அகிலேஷ் யாதவின் சமூக நீதிப் பார்வையும் சமூக நீதி பிரசாரமும் வியூகமும் பாஜகவை 'அயோத்தி'யிலேயே மண்ணைக் கவ்வ வைத்தது. உ.பி.யில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற 2 தலித் எம்பிக்களில் அவதேஷ் பிரசாத்தும் ஒருவர்!

யோகி அரசு மீதான 'அயோத்தியின்' பெருங்கோபம்: இவைகளுக்கு அப்பால் உ.பி.யில் ஆளும் பாஜக அரசு செய்த நம்பிக்கை துரோகத்தை 'அயோத்தி' மாநகர மக்களாள் ஜீரணிக்க முடியவில்லை என்பதும்தான். அயோத்தியில் உலகமே வியக்கும் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் அயோத்தி மக்களுக்குதான் அம்மஞ்சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையாம். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் உள்ளிட்டவைகளுக்கு ஏராளமாக நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது; வர்த்தக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் என பெரும்பாலானவை அகற்றப்பட்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் உரிய இழப்பீடு தருவோம் என்றுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இந்த வாக்குறுதியை இம்மியளவு கூட நிறைவேற்றவில்லையாம் யோகி அரசு. ஆம்.. அயோத்தி ராமர் கோவிலால் எங்களுக்கு ஒரு பயனுமே இல்லை என கதறுகின்றனர் அயோத்தி நகர மக்களும் அயோத்தி நகரை சுற்றிய கிராம மக்களும். இதுவும் பெருங்கோபமாக எதிர்ப்பு வாக்குகளாக பதிவாகி பாஜகவுக்கு 'வரலாற்று' தோல்வியைத் தந்துவிட்டது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்தில்தான் என்றில்லை.. அயோத்தியை சுற்றிய பஸ்தி, அம்பேத்கர்நகர், பாரபங்கி தொகுதிகளிலும் "இந்துக்களின்" பாதுகாவலர் என்ற கேடயத்தை பாஜகவிடம் இருந்து வாக்காளர்களே பறித்து படுதோல்வியைக் கொடுத்துவிட்டனர்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+