ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜன.31-ல் தொடக்கம்- பிப்.1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாட்டின் தற்போதைய 17-வது லோக்சபா பதவி காலம் ஜூன் 16-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 18-வது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

2019-ம் ஆண்டு 17-வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி மார்ச் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 11-ந் தேதி மே 19-ந் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதேபோல 18-வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக் கூடும் என தெரிகிறது.
நாட்டின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைகளின் முடிவில் லோக்சபா தேர்தல் தேதி எப்போது அறிவிப்பது என தீர்மானிக்கப்படும்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டம் அதாவது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும். இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் இறுதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் இதுவாகும்.












Click it and Unblock the Notifications