நாங்கள் எங்கும் போகவில்லை.. இங்கேயே தான் இருக்கிறோம்.. மீம்ஸிற்கு தேர்தல் ஆணையர் கொடுத்த விளக்கம்!
டெல்லி : காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் என்று சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்ட மீம்ஸ் குறித்து தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. சனிக்கிழமையன்று கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், தொடர்ச்சியாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கும் போது தான் வழக்கமாக செய்தியாளர் சந்திப்பு நடக்கும். இம்முறை தேர்தல் முடிவடைந்த பின் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசுகையில், லோக்சபா தேர்தலில் மொத்தமாக 64 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறிய அவர், ஜனநாயக கடமையாற்றியவர்களுக்கு எழுந்து நின்று கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்களும், 1,692 விமான போக்குவரத்தும் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் பெரிய பிரச்சனைகள் இல்லாமல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 540 மறுவாக்குப்பதிவு நடந்த நிலையில், தற்போது 39 முறை மட்டுமே மறுவாக்குப்பதிவு நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் சோசியல் மீடியாவில் தேர்தல் ஆணையத்தை காணவில்லை என்று சில மீம்ஸ் பகிரப்பட்டன. அதுகுறித்து ராஜீவ் குமார் பேசுகையில், காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் என்று சோசியல் மீடியாவில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்களும் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறோம் என்று பதில் அளித்தார். பின்னர், தேர்தல் நடத்தை விதிகளின் போது ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான இலவசங்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications