‘க்ளீன் ஸ்வீப்'.. 3 மாநிலங்களை அலேக்காக அள்ளி பாக்கெட்டில் போடும் பாஜக.. பரபர கருத்துக்கணிப்பு!
டெல்லி: நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், குஜராத், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக 'க்ளீன் ஸ்வீப்' செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குஜராத்: குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். மோடி 3 முறை தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தது முதல் அம்மாநிலம் பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. குஜராத்தில் இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பருச் மற்றும் பாவ்நகர் மக்களவைத் தொகுதிகளிலும், மீதமுள்ள 24 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிட உள்ளன.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறப்போவது யார்? என நியூஸ் 18 குழுமம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 26 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
க்ளீன் ஸ்வீப்: பாஜக 26 இடங்களையும் வென்று க்ளீன் ஸ்வீப் செய்யும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பிற கட்சிகளுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பு கிட்டாது என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சிக்கு 56 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகளும், இதர கட்சிகளுக்கு 2 சதவீத வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 தொகுதிகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும், 5 இடங்களிலும் வெற்றி பெற்று கிளீன் ஸ்வீப் செய்யும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் உத்தராகண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 62 சதவீதம் வாக்குபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 30 சதவீத வாக்குகளும், இதர கட்சிகள் 8 சதவீத வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014 முதல், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் வரும் தேர்தலும் இதே நிலை தொடரும், உத்தரகாண்டை பாஜக க்ளீன் ஸ்வீப் செய்யும் என்கிறது நியூஸ் 18 கணிப்பு ரிசல்ட்.
ராஜஸ்தான்: லோக்சபா இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ராஜஸ்தான் ஒன்பதாவது பெரிய மாநிலமாகும், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது ராஜஸ்தான். 25 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 61% வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 33 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகள் 6 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் என நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் கூட்டணிக் கட்சியான RLP உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 25 இடங்களிலும் வென்றது. 2018 டிசம்பரில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் காங்கிரஸ் தனது நிலையை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது. 2014-ல் பாஜக 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications