ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.. ஒட்டு மொத்த உலகத்திற்குமானவர்.. பரூக் அப்துல்லா பேச்சு
டெல்லி: கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை என்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் சொந்தமானவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வந்தது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வரவேண்டாம்: அன்றைய தினம் கோவில் கர்ப்பகிரஹத்தில் (கருவறை) ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று அயோத்தியில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் வரவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக வீடுகளில் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரூக் அப்துல்லா கருத்து: இந்த நிலையில்தான், ராமர் இந்துக்களுக்கு மட்டும் உரித்தானவர் இல்லை என்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் சொந்தமானவர் எனவும் தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவிலுக்காக பாடுபட்டவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர்: தற்போது இந்தக் கோவில் தயாராகிவிட்டது. கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் என்று நான் இந்த தேசத்திற்கு சொல்கிறேன். உலகில் உள்ள அனைவருக்குமான கடவுள் ராமர். இது புத்தகங்களிலும் எழுதப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய பரூக் அப்துல்லா, சகோதரத்துவம், அன்பு , ஒற்றுமை ஒருவொருக்கொருவர் உதவுவது ஆகியவை குறித்து ராமர் எடுத்துரைத்துள்ளார்.
சகோதரத்துவத்தை மீட்டெடுப்போம்: மத பாகுபாடு இன்றி விளிம்பு நிலையில் உள்ள மக்களை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதிற்குமான போதனைகளை அவர் எடுத்துரைத்துள்ளார். ராமர் கோவில் திறக்கப்பட உள்ள இந்த தருவாயில், நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீட்டெடுப்போம்” என்றார்.












Click it and Unblock the Notifications