ஸ்டாலின் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கா? 2011 தேர்தல் மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: 2011ல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்டாலினிடம் இருந்து நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது என்பதை நிரூபிக்க ஆதாரம் எதாவது இருக்கிறதா என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2011ம் ஆண்டு இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது அங்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவிய சூழலில், சுமார் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

ஸ்டாலின் 2011 தேர்தல் வழக்கு
இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லி சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பொதுமக்களிடம் பணம் விநியோகித்ததாகச் சொல்லி அளிக்கப்பட்ட சிடிக்களில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் முக்கியமான டிஜிட்டல் ஆதாரமாக உள்ளன.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த சிடியில் இருக்கும் டிஜிட்டல் தரவுகளின் உண்மைத்தன்மை இந்தியச் சாட்சியச் சட்டம் 65பி கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா... இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் விசாரிக்கிறது. துரைசாமியின் மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது.
ஆதாரம் இருக்கா?
அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற, திமுக நிர்வாகிகள் பண பலத்தைப் பயன்படுத்தியதாகவும் இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123-இன் கீழ் சட்டவிரோதம் என துரைசாமி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது. அதைக் கடுமையாக ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மறுத்தார்.
அப்போது துரைசாமி தரப்பைப் பார்த்து நீதிபதிகள், "வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்டாலினிடம் இருந்து நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துரைசாமி தரப்பு இல்லை எனப் பதிலளித்தது. இதையடுத்து இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னணி
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் துரைசாமியின் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றித் தள்ளுபடி செய்திருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட சிடிக்கள், சாட்சியச் சட்டம் 65பி சான்றிதழின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்திருந்த நிலையில், துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்
திருமங்கலம் ஃபார்முலாவை போலப் பணம் விநியோகிக்கப்பட்டதாக துரைசாமி தரப்பு வாதிட்டனர். பணப் பெட்டிகளுடன் ஒரு வாகனம் பிடிபட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த 2017ல் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்த நிலையில், இந்த வாதங்களை ஐகோர்ட் ஏற்கவில்லை. வாக்காளர்களைக் கவரப் பணம் கொடுக்க ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம் ஃபார்முலா மூலம் பணம் விநியோகிக்கப்பட்டதாக மனுதாரர் சொன்னாலும் அதை நிரூபிக்கப் போதிய ஆதாரம் இல்லை என்றும் ஐகோர்ட் தெரிவித்தது. மேலும், கட்சி நிர்வாகிகள் செயல்களுக்கு ஸ்டாலினை மறைமுகமாகப் பொறுப்பாக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications