மத்திய பிரதேச தேர்தலில் 150 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.. ஆலோசனைக்கு பின் அடித்து சொன்ன ராகுல்!
டெல்லி: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 150 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் 2013-ம் ஆண்டு மத்திய பிரதேச தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் காங்கிரஸ் வெறும் 58 இடங்களில்தான் வென்றது. அத்தேர்தலில் பாஜக 165 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் 2018-ம் ஆண்டு ம.பி. சட்டசபை தேர்தல் புதிய சரித்திரத்தை எழுதியது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவையாக 114 இடங்களைக் கைப்பற்றியது. முந்தைய தேர்தலைவிட 56 இடங்கள் அதிகம் பெற்றது காங்கிரஸ். பாஜகவும் 109 இடங்களில் வென்றது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். அப்போது பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்தன. இதனால் காங்கிரஸ் அரியாசனம் ஏறியது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தொடக்கம் முதலே காங்கிரஸில் அடிதடிதான். கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையேயான இந்த மோதலுக்கு மத்தியில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் கமல்நாத். சொற்ப இடங்களில் ஆட்சியை பறிகொடுத்த பாஜக, இலவு காத்த கிளியாக காத்திருந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்ப கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக பக்கம் போய்விட்டார். இதனால் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, ஆட்சியை இழந்த காங்கிரஸ் இரண்டுமே சரிசமமான பலம் கொண்டவை. இதனால் இத்தேர்தல் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அண்மையில் கர்நாடகா தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலிலாவது மஜத என்ற 3-வது கட்சி ஒன்று களத்தில் இருந்தது. ஆனால் ம.பி.யில் பாஜக- காங்கிரஸ் இடையேதான் சரியான போட்டி.

இத்தேர்தலில் வெல்வதை இரு கட்சிகளுமே இலக்காக கொண்டு களமிறங்கிவிட்டன. டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ம.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ராகுல் காந்தி கூறுகையில், மத்திய பிரதேசத்தில் இம்முறை 150 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். கர்நாடகா தேர்தல் வெற்றியைவிட பிரம்மாண்ட வெற்றியை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெறும் என்றார். கர்நாடகா தேர்தல் களத்தில் சித்தராமையா, டிகே சிவகுமார் கோஷ்டிகள் முரண்பாடுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு ம.பியில் தேர்தல் பணிகள் தொடங்குவோம் என கமல்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தெரிவித்தும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications