இவரும் வந்துட்டாரே.. சர்வதேச அமைப்பு வரிசையில் இணைந்த சினிமா நடிகர்! மல்யுத்த வீரர்களுக்கு மாஸ் ஆதரவு
டெல்லி: பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு நடிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தேசிய தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்த போராட்டத்திற்கான காரணம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்தான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யார் இந்த பிரிஜ் பூஷன்: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் நிலையில், சில பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல் போராட்டம்: இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது.
மத்திய அரசின் தலையீடு: ஆனால் அப்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வீரர்களுக்கு உறுதியளித்தது.
திருப்பி அனுப்பப்பட்ட தலைவர்கள்: இதற்கிடையே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஜந்தர் மந்தர் சென்றிருந்தார். ஆனால் இந்த பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.
மீண்டும் போராட்டம்: அதேபோல ஒரு சில நாட்களில் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆன நிலையில், மத்திய அரசு வாக்குறுதி அளித்தது போல பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறை, அரசியல் கட்சியினரின் ஆதரவை அவர்கள் நாடினர்.

அரசியல் கட்சியினர் ஆதரவு: இதனையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தளம் என தேசிய கட்சிகள் தொடங்கி, திமுக, விசிக போன்ற மாநில கட்சிகள் வரை இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இந்த போராட்டம் தொடங்கிய ஏப்ரல் 29ம் தேதியன்று ஹரியானா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் நேரில் சென்று மல்யுத்த வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
மாணவர்கள் ஆதரவு: அதேபோல ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் நிர்மல் உள்ளிட்டோர் மல்யுத்த வீரர்களுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களை தொடர்ந்து திரிணாமுல் கட்சியின் எம்பிக்களும் நேரில் சென்று வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அதேபோல "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுடன் நாம் துணை நிற்க வேண்டும். நமது வீரர்கள்தான் நம் நாட்டின் பெருமை. எனவே இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என மமதா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார்.
ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் டெல்லி கேபினட் அமைச்சர்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இத்தனை தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும், பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது ஏன் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி கேள்வியெழுப்பியிருந்தார். சிபிஐ தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான பினோய் விஸ்வமும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் மவுனம்: இப்படியாக ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்த நிலையில், மத்திய அரசு இது குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தது. இதற்கிடையில் வீரர்கள் டெல்லி காவல்துறையில் பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் அளித்திருந்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாகவும், முகாந்திரம் இருந்தால் நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்திருந்தது.
வழக்குப்பதிவு: எனவே, வீரர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இருப்பினும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. எனவே வீரர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில் கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாடாளுமன்றத்தை வீரர்கள் முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆனால் கொஞ்ச தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மட்டுமல்லாது இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் வீரர்களை ஆத்திரத்தின் உச்சிக்கு அழைத்து சென்றது. இத்தனை நாட்களாக பாலியல் புகாரை வைத்து போராட்டம் நடத்திகொண்டிருக்கிறோம். ஆனால் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பினர்.
ஆற்றில் வீசப்பட இருந்த பதக்கங்கள்: இவர்களின் கோபத்தை மேலும் சீண்டும் விதமாக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வீரர்கள் போராட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுப்பதாக அறிவித்தது. எனவே வீரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவதாக அறிவித்தனர். இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கண்டனம்: வீரர்களை கைது செய்ததற்கு 'உலக மல்யுத்த அமைப்பு' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் "பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரிஜ் பூஷன் மீது முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த சில நாட்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்களை காவல்துறை கையாளும் விதம் கவலையளிக்கிறது. அதேபோல ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்திய இடத்தில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தது.
வீரர்கள் ஆதரவு: இவர்களின் போராடத்திற்கு சக வீரர்களும் அதரவளித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்தராவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். "விளையாட்டு அமைப்புகளில் சுதந்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது. போராடும் வீரர்களை மரியாதையான முறையில் கையாண்டிருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இவரைத் தொடர்ந்து வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஆடவர் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரும் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு: விளையாட்டு வீரர்கள், கமிட்டிகள், அரசியல் கட்சிகளின் ஆதரவு குரலை தொடர்ந்து தற்போது சினிமான நட்சத்திரங்களும் இவர்களின் போராட்டத்திற்கு அதரவளித்துள்ளனர்.
மலையாள நடிகரான டோவினோ தாமஸ் கூறுகையில், "அவர்கள் வாங்கிய பதக்கங்கள், வெற்றிகளை ஒரு நிமிடம் தள்ளி வையுங்கள். இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி இருக்கிறது. அந்த வகையில் அவர்களுடைய கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும், பரிசீலிக்கப்பட வேண்டும். நீதி ஒருபோதும் தாமதப்படுத்தப்படக்கூடாது, மறுக்கப்படக்கூடாது" என்று கூறியுள்ளார். அதேபோல இயக்குநர் அஞ்சலி மேனனும் வீரர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications