போர்வெல்லில் விழுந்தது குழந்தை இல்லை, திருட சென்றபோது விழுந்த இளைஞராம்.. டெல்லி சம்பவத்தில் ட்விஸ்ட்
டெல்லி: டெல்லியில் 40 அடி போர்வெல்லில் குழந்தை விழுந்து விட்டதாக பதைபதைப்பு ஏற்பட்ட நிலையில், போர்வெல்லில் இளைஞர் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருட போன போது இளைஞர் தவறி விழுந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள கெஷோபூர் மண்டி பகுதியில் நீர் வள வாரியத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு குடிநீர் தேவைக்காக 40 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை ஒன்று தவறி விழுந்து விட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், மீட்புக்குழுவினரை அழைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழந்தை போர்வெல்லில் விழுந்ததாக தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால், குழந்தை விழுந்ததாக தகவல் கிடைத்ததும் அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு திரண்டனர். பெண்கள் பலரும் கூடி, அதிகாரிகளின் அலட்சியமே இந்த சம்பவத்திற்கு காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட்டனர்.
மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. போர்வெல்லுக்குள் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பலரும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இதற்கிடையே, மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்த பாஜக வேட்பாளர் கமல்ஜித் ஷெராவத், டெல்லி நீர்வள வாரியத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் ஆழ்துளை கிணற்றை சுற்றி தடுப்புகள் வைத்து இருந்தால் குழந்தை தவறி விழுந்து இருக்காது.
விதிகள் பின்பற்றப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். தலைநகர் டெல்லியில் போர்வெல்லுக்குள் குழந்தை சிக்கியிருப்பதாக வெளியான செய்தி தேசிய அளவில் பரபரப்பு செய்தியானது. சிறிது நேரத்தில் போர்வெல்லுக்குள் விழுந்தது குழந்தை இல்லை என்றும் இளைஞர் என்பதும் தகவல் வெளியானது. நிகழ்விடத்திற்கு வந்த டெல்லி குடிநீர் அமைச்சர் ஆதிஷி, ஆழ்துளை கிணறு பூட்டப்பட்ட அறைக்குள்தான் உள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குழந்தை இலை. நபர் ஒருவர்தான் சிக்கியுள்ளார்” என்றார். போலீசார் இது தொடர்பாக கூறுகையில், பூட்டப்பட்ட இந்த அறையை இளைஞர் உடைத்துக்கொண்டு சென்று இருப்பதாகவும் திருடுவதற்காக உள்ளே நுழைந்த நபர் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து இருக்கலாம் என்று கூறினார்.
இதனிடையே, 12 மணி நேரத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழ்நத இளைஞரின் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications