பஞ்சாப் பொற்கோவிலில் படுகொலை முயற்சி- மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு!
டெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் வாயிலில் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த சிரோமணி அகாலி தள் தலைவரான முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது 'காலிஸ்தான்' தனிநாடு கோரும் இயக்கத்தின் முன்னாள் தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் சுக்பீர்சிங் பாதல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர். இதனால் பஞ்சாப் பொற்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது..
பஞ்சாப் மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக சிரோமணி அகாலிதளம் இருந்து வந்தது. சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் சுக்பீர் சிங் பாதல். பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல்.

அகாலி தளம் ஆட்சியில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சீக்கிய மதத்தை அவமதித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் குர்மீத் ராம் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்கியது அகாலிதளம் ஆட்சி.
ஆனால் குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை தராதது ஏன் என்பது தொடர்பாக சீக்கிய மதத்தின் உயர்நிலை அமைப்பான அகால் தத் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அகாலி தள் தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பலரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. சீக்கிய மதத்தில் தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலில் பாத்திரங்கள் கழுவுதல், காலணிகளை துடைத்தல், காவல் காத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும்.
இதில் பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதால் அவரது மகன் சுக்பீர் சிங் பாதலுக்கு பொற்கோவிலில் காவலராக பணிபுரிய வேண்டும்; பாத்திரங்களை கழுவ வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ஏற்று பொற்கோவிலுக்கு சென்ற சுக்பீர் சிங் பாதல் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டார். சுக்பீர் சிங் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் சக்கர நாற்காலியில் அமர்ந்து காவல் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது அவரது ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple premises in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, are offering 'seva' under the religious punishments pronounced for them by Sri Akal Takht Sahib, on 2nd December. pic.twitter.com/rLlMyRWo9S
— ANI (@ANI) December 4, 2024
இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் பொற்கோவில் வாயிலில் சுக்பீர் சிங் பாதல், சக்கர நாற்காலியில் ஈட்டியுடன் அமர்ந்த படி காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீக்கியர் ஒருவர் பொற்கோவிலுக்குள் நுழைவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக தாம் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதலை நோக்கி சுடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் துப்பாக்க்சி சூடு நடத்திய நபரை சுற்றி வளைத்து தாக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் பொற்கோவில் வளாகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயன்ற நபர், இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு கோருகிற பப்பர் கல்சா என்ற பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications