"திக்திக் சம்பவம்.." போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பெண்கள்.. மணிப்பூர் இம்பாலில் மீண்டும் ஊரடங்கு
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே மீண்டும் சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அப்போது அங்கே வன்முறைச் சம்பவங்கள் கையை மீறிச் சென்றன. மாநிலமே பற்றி எரியும் சூழல் ஏற்படவில்லை.

பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அங்கே முழுமையாக அமைதியான சூழல் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அங்கே கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
மணிப்பூர் நிலை: குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு, அங்கே இளம்பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட கொடூரச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவு தொடங்கிப் பல நடவடிக்கைகளால் அங்கே சற்று அமைதி திரும்பியது.
சில காலம் அங்கே அமைதி திரும்பிய போதிலும், இப்போது மீண்டும் வன்முறை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. அங்குக் கடந்த சில நாட்களாக மீண்டும் பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே அங்கே சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக் கோரி, மைத்தேயி மகளிர் கண்காணிப்புக் குழுவான மீரா பைபிஸின் உறுப்பினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கே மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
மீண்டும் ஊரடங்கு: அந்தப் பெண்களில் பலரும் சாலைகளில் மறியல் செய்ய முயன்றனர். இதனால் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். போலீசார் கைது செய்துள்ள அந்த 5 பேரும் நிரபராதிகள் என்று கூறி அவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். பெரும் முயற்சிக்குப் பிறகு அந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதனால் அங்கே மிகப் பெரியளவில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து மோதல் ஏற்பட்ட மாநிலத்தின் இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னணி என்ன: மணிப்பூர் போலீசார் கடந்த செப். 16ஆம் தேதி மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே மைத்தேயி இன பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அவர்கள் ஆயுதமேந்திய வன்முறையாளர்கள் இல்லை என்று மறுக்கும் பெண்கள், தங்கள் கிராமத்தை வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்கவே அவர்கள் இப்படிச் செய்ததாகவும் கூறுகின்றனர். இருப்பினும், மறுபுறம் குர்கி இன மக்கள் இதுபோலத் தான் வன்முறையாளர்கள் தங்களைக் குறிவைத்துத் தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெரும் போராட்டம்: முன்னதாக இந்த 5 பேரை விடுவிக்கக் கோரி இம்பால் பள்ளத்தாக்கில் மைத்தேயி இன பெண்கள் குழுக்கள் 48 மணி நேர பந்த்தை அறிவித்தனர். இந்தச் சூழலில் தான் பெண்கள் திடீரென ஹெய்ங்காங், ஆந்த்ரோ, குவாகீதெல், நம்போல், பிஷ்னுபூர், கெய்புல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களை மைத்தேயி இன பெண்கள் முற்றுகையிட்டனர். அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை எல்லாம் வீச வேண்டி இருந்தது.
இந்த போராட்டம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிலைமை கையை மீறி செல்லாம் இருக்க அங்கே இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications