முடிவுக்கு வந்த ஒன்றரை ஆண்டு சிறைவாசம்! மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த 2023ம் ஆண்டு கைது செய்திருந்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த அவரது மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சிசோடியாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த 2023 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சிபிஐ கைது செய்தது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதாவது சிசோடியா ஊழலில் ஈடுபட்டிருந்தபோது 14 செல்போன்கள் மற்றும் 43 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் விசாரணை தொடங்கியபோது இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் சிசோடியா ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனு கடந்த மே மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்ளை கலைத்துவிடுவார் என்று நீதிமன்றம் அச்சம் தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது இது தீவிரமான வழக்கு என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
எனவே ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்து. தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக கூறியுள்ளது. இதனையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சிசோடியா சிறயைிலிருந்து வெளியே வருகிறார்.












Click it and Unblock the Notifications