ஆபரேஷன் சிந்தூர்: மோடியை புகழ்வதாக கூறி சர்ச்சைக்குரிய பேச்சு.. வாங்கி கட்டும் ம.பி துணை முதல்வர்
டெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மொத்த நாடும், ராணுவ வீரர்களும், "பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்க வேண்டும்" என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா, பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் துணை முதல்வர் ஒருவரே சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு மொத்த தேசமும் பாராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால், சில அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேசும் விவகாரம் முகம் சுளிக்கும் வகையிலும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

மபி துணை முதல்வர் சர்ச்சை பேச்சு
அதாவது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் அமைச்சராக இருக்கும் விஜய் ஷா என்பவர், சமீபத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் நாட்டுக்கு அறிவித்த பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் மத்திய பிரதேசத்தின் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான் ஜெகதிஷ் தேவ்தா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் காலில் விழுந்து..
கெகதீஷ் தேவ்தா கூறுகையில், "பஹல்காம் தாக்குதலின்போது, பெண்கள், குழந்தைகள் முன்னிலையில், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை மத அடிப்படையில சுட்டுக்கொன்றனர். அதற்கு பழிவாங்கும்வரை நாட்டு மக்கள் கோபத்துடன் இருந்தனர். மன உளைச்சலுடன் காணப்பட்டனர். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
ஒட்டுமொத்த நாடும், ராணுவம், அதன் வீரர்களும் பிரதமர் மோடியின் காலடியில் தலைவைத்து வணங்குகிறார்கள். ஒட்டுமொத்த நாடும், பிரதமரின் காலில் விழுந்து வணங்குகிறது. அந்த பதிலடியை வாழ்த்த வார்த்தைகள் போதாது. எனவே, அனைவரும் பலத்த கைதட்டல் எழுப்புங்கள்" என்று பேசினார்.
வெட்கக்கேடானது என விமர்சனம்
பாஜகவை சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தாவின் இந்த கருத்து கடும் விமர்சனங்களை உள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறுகையில், "ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ராணுவத்தின் வீரத்தை நினைத்து பெருமைப்படுகிறார்கள். ஆனால், பாஜக நிர்வாகிகள், ராணுவத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள்.
இப்படி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாஜக மேலிடம் பாதுகாத்து வருகிறது. ராணுவத்தை பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அவமதித்து வருவது வெட்கக்கேடானது" என்று கூறியுள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் ஜெகதீஷ் தேவ்தாவை, உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மோடிதான் இதற்கு பொறுப்பாக வேண்டியிருக்கும் என சாடினார்.
நெட்டிசன்களும் விமர்சித்து பதிவு
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு கொடுத்த பாடம். இதை நமது தீரமிக்க ராணுவ வீரர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். தேசத்திற்காக தங்கள் உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கிய வீரர்களுக்குதான் ஆபரேஷன் சிந்தூரின் முழு பெருமையும் சேரும்.
ஆட்சியாளர்கள் பங்கு இருக்கிறது என்றாலும் கூட, களத்தில் இறங்கி போரிடும் வீரர்களே பெருமைக்குரியவர்கள் அவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக இப்படி பேசுபவர்களை என்ன சொல்வது. இதுபோன்றவர்களை பாஜக ஏன் உயரிய பொறுப்பில் நீடிக்க அனுமதிக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெகதிஷ் தேவ்தா விளக்கம்
இதற்கிடையே, இந்த சர்ச்சைக்குக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெகதிஷ் தேவ்தா கூறியிருப்பதாவது:- "என்னுடைய பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுகிறது. 'ஆபரேஷன் நடவடிக்கையின் போது ராணுவம் பதிலடி கொடுத்தது. ஒட்டுமொத்த மக்களும் மரியாதைக்காக ராணுவத்தின் காலடியில் விழுந்து வணங்கினர்' என்றுதான் பேசினேன். எனது பேச்சை திரித்துக் கூறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications