மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க
டெல்லி: இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரமாகத் தொடர்கிறது. இதற்கிடையே பிரதமர் மோடி ஒரு போன் கால் போட்டு இரு தரப்பிற்கும் இடையே பேசினால் இந்த மோதல் முடிவுக்கு வந்துவிடும் என்று இந்தியாவிற்கான முதல் அமீரக தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இரு தரப்புமே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் மோதல் தொடர்பாகவும் தொடர்பாகவும் இந்தியாவிற்கான முதல் அமீரக தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகம்
பிரபல ஆங்கில செய்தி ஊடகமான என்டிடிவி ஊடகத்திற்கு இது தொடர்பாக அவர் பேட்டியளித்துள்ளார். அதில் ஈரான்- இஸ்ரேல் மோதலில் சிக்கிக்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் விரும்பவில்லை என ஹுசைன் ஹசன் மிர்சா தெரிவித்தார். மேலும், தங்கள் நிலப்பரப்பை எந்தத் தரப்பும் தாக்குதல் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்காது எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், நாங்கள் ஏன் இதில் ஈடுபட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மோதலில் அமீரகம் இதில் ஈடுபட எந்தக் காரணமும் இல்லை. அபுதாபி முக்கியமான புவிசார் அரசியல் நிலையில் உள்ளது.. ஈரானுக்கு அண்டை நாடாகவும், ஆபிரகாம் ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலுடன் கூட்டாளியாகவும் திகழ்கிறது. நாங்கள் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்றார்.
மோடியின் ஒரு போன் கால்
அமீரகத் தலைவர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்பு குறித்துப் பேசிய மிர்சா, "மோடிக்கு வளைகுடாத் தலைவர்கள் மத்தியிலும், பொதுமக்கள், தொழில் சமூகத்தினர் மத்தியிலும் மிகுந்த மரியாதை உண்டு. இப்போது மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கு மத்தியிலும் மோடியின் நம்பகத்தன்மை அதிகமாகவே இருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கு மோடி ஒரு போன் போட்டுப் பேசினாலே போதும், இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மோதலை முடிவுக்குக் கொண்டு வர மோடியின் ஒரு செல்போன் அழைப்பு போதும்!
செல்வாக்கு
இதை நான் நம்பிக்கை உடனேயே சொல்கிறேன். இரு தரப்பிலும் மோடிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நான் இதைச் சொல்கிறேன். இந்த மோதல் எங்கள் மண்ணில் நடக்கும் போர். அதை முடிவுக்குக் கொண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார். இப்போது வரை மோதல் தொடர்பாகவும் இழப்புகள் தொடர்பாகவும் வந்துள்ள தகவல்கள் துல்லியமாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் விவகாரம்
ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வந்த பிறகாவது ஈரான்- இஸ்ரேல் போர் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவரது நியமனம் எந்த விதத்திலும் மோதலை நிறுத்தவில்லை. மேலும், இஸ்ரேல் ராணுவம் திங்களன்று மத்திய ஈரானில் புதிய தாக்குதல்களை நடத்தியதுடன், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளையும் தாக்கியது. மேலும், புதிய சுப்ரீம் லீடர் மொஜ்தபா காமேனியும் தங்கள் இலக்கு எனக் குறிப்பிட்டது.
இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 1,332 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஈரானின் ஐ.நா தூதர் குறிப்பிட்டார். இந்த மோதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிகிச்சை பெற்று வந்த ஏழாவது அமெரிக்க வீரரும் சமீபத்தில் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications