சிக்கிமில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வாகனம் விபத்து..3 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலியான சோகம்
டெல்லி: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 ராணுவ அதிகாரிகள் 13 வீரர்கள் என மொத்தம் 16 பேர் பலியாகினர். மேலும் காயம் அடைந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம். இமய மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும் அழகிய பள்ளத்தாக்குகளையும் கொண்டது.
சிக்கிமின் வடக்குப் பகுதிகள் சீன எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.

ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணி
இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக சீனா எல்லைப்பகுதியில் அடிக்கடி வாலாட்டி வருவதால் தற்போது சீன எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சிக்கிமின் வடக்குப்பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் பயண தேவைக்காக ராணுவத்திற்கு சொந்தமான வாகனங்களில் செல்வதுண்டு.

16 வீரர்கள் பலி
அந்த வகையில் இன்று ராணுவத்திற்கு சொந்தமான டிரக்கில் வீரர்கள் பயணம் செய்து கொண்டு ருந்த்னர். 3 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. இதில் ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் டிரக்கில் பயணம் செய்த 16 வீரர்கள் பலியாகினர். இதில் 3 பேர் ராணுவ அதிகாரிகள் என்று முதல் கட்ட தகவல்கள் சொல்கின்றன. சட்டன் பகுதியில் இருந்து தன்கு என்ற இடத்திற்கு ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் ட்விட்டர்
செமா என்ற பகுதி வழியாக வரும் போது வளைவு ஒன்றை திரும்ப முடியாமல் கட்டுப்பாடை இழந்த வாகனம் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தததாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் உடனடியாக நடைபெற்றதாகவும் 4 வீரர்கள் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளர். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-

மிகுந்த வேதனை அளிக்கிறது
வடக்கு சிக்கிம் பகுதியில் சாலை விபத்தில் நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக இந்த தேசம் மிகவும் கடன்பட்டு இருக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications