"அச்சா”.. மத்திய அமைச்சர் நிறைய பேசுனாரு.. ஆனா எங்களுக்குத்தான் இந்தி புரியல.. துரைமுருகன் கிண்டல்!
டெல்லி: காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சரிடம் பேசினோம், காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் பங்கேற்று வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லி சென்றார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று காலை புறப்பட்டு டெல்லி சென்றார். மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகமான ஷ்ரம்சக்தி பவனில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்துப் பேசினார் அமைச்சர் துரைமுருகன். அப்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மனு ஒன்றையும் அளித்தார். அதில், கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை நிலுவை பாக்கி இல்லாமல் கர்நாடக அரசு தந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "புதிய அமைச்சரவை பதவியேற்ற பின், முதல் முறையாக துறை சார்ந்த அமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தோம்.
காவிரி நீர் பங்கீடு, மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் ஆலோசித்தோம். மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு எந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் வழங்கியது கிடையாது. காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை கேட்டுவிட்டு அவர் நிறைய விஷயங்கள் பேசினார். அவர் இந்தியில் பதிலளித்ததால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. இருந்தாலும், எங்கள் செயலாளர் விளக்கி சொன்னார். " எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications