"இந்தியாவின் வளர்ச்சி வேற லெவல்.." அப்படியே சீனா பக்கம் திரும்பி.. அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொன்னார்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசு நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், உலக நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு குறித்துப் பேசினார். மேலும், அவர் இந்தியா சீனா உறவு குறித்து விரிவாகப் பேசியிருந்தார்.

ஜெய்சங்கர்: அங்கே டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், "அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும் இந்தியாவின் உறவு நன்றாகவே இருக்கும். அதேநேரம் இதை நாம் சீனாவுடன் ஒப்பிட முடியாது. சீனா உடனான உறவு வேறு மாதிரி இருக்கும்
2015இல், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பெருங்கடல் மற்றும் அங்குள்ள தீவுகள் என அனைத்தையும் கொண்ட ஒரு விரிவான பார்வையை வெளிப்படுத்தினார். அதன்பிறகு இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவும் மத்திய ஆசியாவுடன் மிகவும் திறம்பட இணைக்கும் ஒரு திட்டத்தைப் பின்பற்றி வருகிறது.. இது பல வழிகளில் இந்தியாவுக்கு உதவியுள்ளது.
அசாதாரண நிலை: உயர் மட்டத்தில், அனைத்து குறிப்பிடத்தக்க அதிகார மையங்கள் உடனும் சிறந்த அணுகுமுறையை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா அல்லது ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும், தனித்தன்மையைத் தேடாமல் இரு தரப்பு முன்னேற்றத்திற்கு முயல்கிறோம். அதேநேரம் எல்லை விவகாரம், தற்போதுள்ள நமது உறவுகளின் அசாதாரண நிலை காரணமாகச் சீனா உடன் நாம் சற்று வித்தியாசமான உறவையே கொண்டிருக்கிறோம்.

சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் அவர்களின் நடவடிக்கை எல்லை ஒப்பந்தங்களை மீறுவதாகவே இருக்கிறது. ஒரே காலகட்டத்தில் சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி என்பது இரு தரப்பிற்கும் இடையே போட்டி அம்சங்கள் இல்லாமல் இல்லை.
இந்தியா தயார்: இந்தியாவின் முக்கியமான முன்னுரிமைகள் என்பது நமது அண்டை நாடுகள் தான்.. இந்தியாவின் அளவு மற்றும் பொருளாதார வலிமையைக் கருத்தில் கொண்டு, சிறிய அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. இது இரு தரப்பிற்கும் நல்ல பலனையே தரும். பிரதமர் மோடி ஆட்சியில் இதையே தான் நாங்கள் செய்துள்ளோம்.. கடந்த 10 ஆண்டுகளாக இதுதான் நமது பிராந்திய நாடுகள் உடனான கொள்கையாகும்.
பல துறைகளில் இந்தியா வியத்தகு விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. அதேநேரம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் இதற்கு விதிவிலக்கு. அது கொரோனா சவாலாக இருந்தாலும் சரி அல்லது கடன் அழுத்தங்களாக இருந்தாலும் சரி, இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுக்காக உதவியுள்ளது. இலங்கை அண்டை நாட்டிற்குச் சென்ற போது, இந்தியா 4 பில்லியன் டாலர் கொடுத்து உதவியது.

அண்டை நாடுகள்: தெற்காசியாவைத் தாண்டி இந்தியா அனைத்து திசைகளிலும் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடுகளுடன் ஒரு உறவை உருவாக்கி வருகிறார்கள். இது இந்தியாவுடனான ஆழமான ஈடுபாட்டிற்கான பாதையைத் திறந்துள்ளது. குவாட் அமைப்பின் மூலமும் பல துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியாவின் உறவு மிகச் சிறப்பாக இருக்கிறது.. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய I2U2 என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இது இந்தியாவின் முக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு மையங்களாக உருவெடுத்துள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications