டெல்லி சென்றடைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
டெல்லி: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அவர் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் 1600க்கும் மேற்பட்ட பணியாளர்கள்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றடைந்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் உதயநிதியை வரவேற்றனர். உதயநிதி ஸ்டாலினுடன், விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின், நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications