தலைமை நீதிபதி லெட்டரை பார்க்கும் வரை கூட காத்திருக்க முடியலையா? சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்!
டெல்லி: தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை கூட ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதங்களை அடுக்கினார்.
கீழமை நீதிமன்றங்களால் முடித்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருவதற்கு தடை விதிக்க கோரி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் நேற்று முன்தினம் தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் இந்த வழக்கு மீண்டும் ரித்திகேஷ் சாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பதிவாளர் அறிக்கையைச் சுட்டிக்காட்டி வாதிடுகையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உரிய ஒப்புதல் இல்லாமலேயே தனி நீதிபதி விசாரித்து வருகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல" வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, இந்த வழக்கை தனி நீதிபதியாக உள்ள ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார். அதற்கு பதிலடியாக வாதங்களை முன்வைத்தார் அபிஷேக் சிங்வி.
அபிஷேக் சிங்வி வாதிடுகையில், "தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை. தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை? நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் குறிப்பிட்ட அந்த நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கிறது" என வாதிட்டார்.
மேலும், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, அதன் பின்னர்தான் இதுதொடர்பாக அனுமதி கோரி ஒரு கடிதத்தை தலைமை நீதிபதி பார்த்தார் என்று நீதிமன்றம் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? என அமைச்சர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.
அதனைப் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, தலைமை நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கலாம் அல்லது வேறு நீதிபதி முன்பு விசாரிக்க பட்டியலிடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications