Mood of the Nation 2026: இன்னைக்கு மக்களவை தேர்தல் நடத்தப்பட்டால்.. என்டிஏ எவ்வளவு தொகுதிகளை பெறும்?
டெல்லி: வழக்கமாக மக்களவை தேர்தலுக்கு முன்னரும், பின்னரும்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்தியா டுடே மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்தும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியாகும். அந்த வகையில், தற்போது மக்களவை தேர்தல் நடத்தப்பட்டால், என்டிஏ கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டியும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை ஒட்டியும் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிய, இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அரசியல் களம்
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மற்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, மத்திய அரசின் மீதான மக்களின் அதிருப்தி அல்லது ஆதரவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இது சரியான நேரமாகக் கருதப்படுகிறது. அதேபோல, 2025-ன் இறுதியில் நடைபெற்ற டெல்லி மற்றும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள், மற்றும் 2026 தொடக்கத்தில் நடந்த மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு தேசிய அளவில் அரசியல் களம் எப்படி மாறியிருக்கிறது என்பதை இந்தக் கணிப்பு விளக்குகிறது.
மோடி மீது நம்பிக்கை
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி 352 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே இருப்பதாக இந்தக் கணிப்பு கூறுகிறது.
பாஜகவின் வெற்றி
2024 தேர்தலில் 234 இடங்களை வென்ற காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி, தற்போது தேர்தல் நடந்தால் 182 இடங்களாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆகஸ்ட் கணிப்பை (208 இடங்கள்) விடக் குறைவு. 2025-ல் டெல்லி மற்றும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதும், 2026 தொடக்கத்தில் மகாராஷ்டிரா நகராட்சி மற்றும் BMC தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் இந்தக் கணிப்பில் எதிரொலிப்பதாகக் கருதப்படுகிறது.
புத்துயிர் பெற்ற காங்கிரஸ்
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் பெரும்பான்மை பெறத் தவறி, 272 என்ற இலக்கை எட்டாமல் 240 இடங்களிலேயே நின்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை எட்டி, ராகுல் காந்தி தலைமையில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறியைக் காட்டியது.
பாஜகவுக்கு சவால்
இந்த ஆய்வுக் கணக்குகள் 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உத்வேகம் அளிக்கிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஒருபோதும் ஆட்சியில் இருந்ததில்லை என்பது அக்கூட்டணிக்கு அங்கு பெரும் சவாலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications