சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ்! முத்ரா கடன் திட்ட உச்ச வரம்பு ரூ 20 லட்சமாக உயர்வு
டெல்லி: சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான முத்ரா கடன் உதவித் திட்டத்தில் சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ரூ 20 லட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வென்ற பாஜக, கூட்டணியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

அதில் முத்ரா கடன் உதவி திட்டம் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதென்ன முத்ரா கடன் உதவி திட்டம்? விரிவாக பார்க்கலாம். ! பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தின் படி 3 பிரிவுகளாக கடனுதவி அளிக்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் வரையிலும் கிஷோர் என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 5 லட்சம் வரையிலும் தருண் என்ற பெயரில் ரூ 5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
விவசாயம் , அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இந்த திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்த கடனுக்கு எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும். இதற்கான விண்ணப்பங்கள் உங்கள் அருகில் இருக்கும் வங்கிகளிலேயே கிடைக்கும்.
விண்ணப்பத்தில் அடையாள சான்று, இருப்பிட சான்று, இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையரின் விவரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்றவை நிரப்ப வேண்டும். முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிகளுக்கு அதற்கான அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப்பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டை மூலம் கடன் தொகையில் 10 சதவீதம் அதிகபட்சம் ரூ 10 ஆயிரம் வரை பெறலாம்.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். விண்ணப்பம் செய்பவரின் வணிகம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது நடந்து கொண்டிருக்க வேண்டும். 24 முதல் 7- வரையிலான தொழில்முனைவோர் மட்டுமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சுருக்கமாக சொல்ல போனால் எந்த வித சொத்தையும் அடமானம் வைக்காமல் கடன் பெறும் திட்டம்தான் முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் தற்போது கடன் தொகை ரூ 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications