அமெரிக்காவில் பதுங்கிய மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா.. நாடுகடத்துவதில் தொடரும் சிக்கல்! என்னாச்சு?
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தஹாவ்வூர் ராணா இப்போது அமெரிக்காவில் தங்கி இருக்கிறார். அவரை இந்தியா அழைத்து வரத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடைசி நேரத்தில் இப்போது ஏற்பட்ட சிக்கலால் தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வரலாற்றில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்று கடந்த 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல். மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் என நகரின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

மும்பை தாக்குதல்
பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற ஒரு பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான். அவன் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, 2012ல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டான்.
தஹாவ்வூர் ராணா நாடுகடத்தல்
அதேநேரம் இந்த பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்தவர்கள் பாகிஸ்தானில் இருந்தனர். அவர்களை இந்தியா அழைத்து வந்து விசாரிக்கும் முயற்சியிலும் மத்திய அரசு இறங்கியது. அதில் முக்கியமானவர் தஹாவ்வூர் ராணா. பாகிஸ்தானில் பிறந்த தஹாவ்வூர் ராணா மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இப்போது அமெரிக்காவில் உள்ள தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்த போது கூட, தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது ராணாவை நாடு கடத்த தனது அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இது இந்தியாவுக்குப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. டிரம்ப் இப்படிச் சொல்லி 3 வாரங்கள் ஆகிவிட்ட போதிலும் தஹாவ்வூர் ராணா இதுவரை நாடுகடத்தப்படவில்லை. இந்த விஷயத்தில் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்துவதில் சிக்கல்
அதாவது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை நிறுத்தி வைக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தஹாவ்வூர் ராணா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. அந்த மனு விசாரணைக்கு வந்து, அதில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வகை தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வந்து பாதை
பிப்ரவரி 11, 2025 - பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு, ராணாவை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்து.
பிப்ரவரி 12, 2025 - அமெரிக்க வெளியுறவுத் துறையின் உதவி சட்ட ஆலோசகர் ஆலிவர் லூயிஸ் நாடுகடத்தல் முடிவை உறுதிப்படுத்தும் வகையில் அது குறித்த உத்தரவை ராணா தரப்புக்கு வழங்கினார்.
பிப்ரவரி 13, 2025 - எதன் அடிப்படையில் நாடு கடத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை ராணா தரப்பு அமெரிக்க அரசிடம் கோரியது.
பிப்ரவரி 19, 2025 - அமெரிக்காவின் 9th சர்க்யூட் நீதிமன்றத்தில் தன்னை நாடுகடத்தக் கூடாது என ராணா வழக்கு தொடர்ந்தார்
பிப்ரவரி 21, 2025 9th சர்க்யூட் நீதிமன்றம் ராணாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
பிப்ரவரி 28, 2025 - உச்ச நீதிமன்றத்தில் ராணா கோரிக்கை மனுத் தாக்கல் செய்தால் மட்டுமே நாடுகடத்தலைத் தள்ளி வைக்க முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்தது.
பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 2, 2025 - தன்னை நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா தரப்பு வழக்கு தொடர்ந்தது.
.
மார்ச் 5, 2025 - அமெரிக்க உச்ச நீதிமன்றம் ராணாவின் அவசரக்கால விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications