உணவு, உதவியின்றி 13 மணி நேரம்.. குவைத் ஏர்போர்ட்டில் தவிக்கும் இந்திய விமான பயணிகள்.. என்னாச்சு
டெல்லி: மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானம் திடீரென குவைத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் பயணித்த பயணிகள் 13 மணி நேரத்திற்கு மேலாக குவைத்தில் இருப்பதாகவும், ஏர்போர்ட்டில் உணவு, உதவி எதுவும் இன்றி தவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்கு வாதம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு கல்ப்ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் திடீரென குவைத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் 13 மணி நேரத்திற்கும் மேலாக குவைத் ஏர்போர்ட்டில் உணவு, உதவி எதுவும் இன்றி பயணிகள் தவித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்கு வாதம் செய்யும் வீடியோக்கள் பரவி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்காவை சேர்ந்த பயணிகளுக்கு மட்டுமே தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாகவும் இந்திய பயணிகளுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கவில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானம் திடீரென யூ டேர்ன் எடுத்து குவைத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்புதான் தகவல் தெரிவிக்கப்ட்டதாகவும் சொல்லப்படுகிறது. விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்தாகவும் இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது தொடர்பாக விமான நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரக அதிகாரிகள் விமான நிலையம் சென்றுள்ளனர். விமான பயணிகள் ஏர்போர்ட்டின் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருவதால் அந்த ஹோட்டல்களில் இடம் இல்லை. வருகை தந்ததும் விசா பெறும் வசதியின் கீழ் இந்தியர்கள் வரமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். உச்சி மாநாடு காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மணி நேரமாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக பயணிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், "இங்கு 60 க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கிறோம். இன்று காலை முதலே ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையும் வந்து நாம் புறப்பட இருக்கிறோம் என சொல்கிறார்கள். நாங்கள் அனைவருமே நாளை பணிக்கு செல்ல வேண்டும். இங்கிலாந்தில் எங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தூதரகத்தையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications