முஸ்லிம் பெண் பருவமடைந்துவிட்டாலே பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே திருமணம் செய்யலாம்: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: முஸ்லிம் சட்டங்களின் படி ஒரு முஸ்லிம் பெண் பருவமடைந்துவிட்டாலே பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமது மைனர் பெண், 25 வயது ஆணை திருமணம் செய்து கொண்டு கணவனுடன் வசித்து வருவதற்கு எதிராக பெண்ணின் பெற்றோர் முதலில் போலீசில் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கில் போக்சோ சட்டப் பிரிவு உள்ளிட்டவைகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜஸ்மீத்சிங் விசாரித்தார். இவ்வழக்கில் பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பெண் கர்ப்பமாக உள்ளார்; அவரது சுய விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்த விசாரணையின் போது நீதிபதி ஜஸ்மீத்சிங் கூறியதாவது: திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு வயது 15 என்கிறது போலீஸ் தரப்பு. ஆனால் ஆதார் தகவலின் படி பெண்ணின் வயது 19. முஸ்லிம்கள் சட்டப்படி பருவமடைந்த பெண் ஒருவர் அவர் 18 வயதுக்கு குறைவான மைனராகவே இருந்தாலும் பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம்; கணவருடன் வசிக்க உரிமை இருக்கிறது.
பெண் தாமாகவே திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பிறகு அவர்களை பிரிக்க அரசுக்கு உரிமை கிடையாது. அப்படி செய்வது ஆக்கிரமிப்புக்கு இணையானது. போக்சோ சட்டம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கின்றன ஒரு சட்டம். அது முஸ்லிம் சட்டத்துக்கும் பொருந்தும். அதேநேரத்தில் இந்த வழக்கு வேறுபட்டது.
இவ்வழக்கில் திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாக புகார் அல்லது குற்றச்சாட்டும் இல்லை. திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதேநேரத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் தமது பெற்றோர் வீட்டில் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவு ம் கூறி உள்ளார். ஆகையால் அப்பெண் தமது கணவருடன் இணைந்து வாழலாம்; அவர்களது பாதுகாப்பை டெல்லி போலீசார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications