சர்ச்சை! நீட் தேர்வு எழுதி கொண்டு இருந்த மாணவிகளை பாதியில் அழைத்து ஹிஜாப் கழற்ற சொன்னதால் பரபரப்பு
டெல்லி: நாட்டில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு எழுத வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வைத் தள்ளி வைக்கத் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நேற்றைய தினம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 95% தேர்வு எழுதி உள்ளனர்.

நீட்
நாட்டில் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே நீட் தேர்வு நடந்து முடிந்தது. இருப்பினும், சில பகுதிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் பிரச்சினையை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானின் கோட்டா மற்றும் மகாராஷ்டிராவின் வாஷிம் ஆகிய இடங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளனர்

ஹிஜாப்
ராஜஸ்தானின் கோட்டாவில், மோடி கல்லூரி வாசலில் முஸ்லீம் மாணவிகள் நிறுத்தப்பட்டு, ஹிஜாப்களைக் கழற்றுமாறு கேட்டுள்ளனர். இதனால் அங்கு மாணவர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு கண்காணிப்பாளர் அங்கு விரைந்து சென்றார். தேர்வின் போது முறைகேடுகளில் பிடிபட்டால் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கடிதம் வாங்கிக் கொண்டு மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

புகார்
கோட்டா பகுதியில் இந்தச் சச்சரவுக்குப் பின்னர், மாணவிகள் தேர்வு எழுதி அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மகாராஷ்டிராவின் வாஷிம் பகுதியில் பல மாணவிகள் ஹிஜாப்களைக் கழற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு கண்காணிப்பாளர்கள் ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் புகார் அளித்துள்ளனர்.

தேர்வு அறையில் இருந்து
மாதோஸ்ரீ சாந்தாபாய் கோட் கல்லூரி மகாவித்தியாலயத்தில் தேர்வு மையத்திலிருந்து மாணவிகள் வெளியே அழைக்கப்பட்டு, ஹிஜாப்களை வலுக்கட்டாயமாகக் கழற்ற வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியிலிருந்து இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வு நடைபெற்ற கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஆடை கட்டுப்பாடு
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி, தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் சாதாரண ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், முழு கையுடன் கூடிய லைட் நிற ஆடைகளைத் தவிர்க்குமாறு கூறப்பட்டு இருந்தது. அதேபோல தேர்வு எழுத வருபவர்கள் ஷூ அணிய அனுமதி இல்லை. முறையான சோதனையை நடத்த ஏதுவாக குறைந்தபட்சம் இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக நீட் தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications