"எனது அம்மா தமிழகத்தை சேர்ந்தவர் ".. குட்டிகதையில் திமுக எம்பிக்களுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி
டெல்லி: தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என லோக்சபாவில் பேசியதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகு நேற்று ராஜ்யசபாவில் பேசிய தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரிய நிலையில் எனது அம்மாவும் தமிழகத்தை சேர்ந்தவர் தான். தமிழ் மொழியை நானும் விரும்புகிறேன் என்று திமுக எம்பிக்களுக்கு பதிலடி கொடுத்தார். அதோடு தமிழகத்துக்கும் அவருக்கும் உள்ள உறவு பற்றி விளக்கமும் அளித்து கவனம் பெற்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டவர்கள் மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது எனவும், மத்திய அரசு நிதி பங்கீட்டை நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார். "தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் தடுத்து விட்டார். இதன்மூலம் அக்கறை இன்றி மாணவர் நலனை அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். மாணவர்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள்'' என்று விமர்சனம் செய்தார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தர்மேந்திர பிரதான் தனது பேச்சை வாபஸ் வாங்கினார். மேலும் தனது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்தனர். அதேபோல் நேற்று காலையில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து மன்னிப்பு கேட்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதன்பிறகு நேற்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் பேசினார். அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்
அமளி செய்தனர். அப்போது தர்மேந்திர பிரதான், ‛‛நான் பேசியது யாரின் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.'' என்று கூறினார். அதன்பிறகு தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான் தனது தாய்க்கும் தமிழ்நாடு தான் என்று கூறினார்.
இதுதொடர்பாக தர்மேந்திர பிரதான், ‛‛தற்போது சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் நான் ஒன்றை விளக்கமாக கூற விரும்புகிறேன். எனது ஒடியா சமுதாயத்தின் (ஒடியா மக்கள்) கடவுள் ஜெகன்நாத் தான் எல்லாமுமாக இருக்கிறார். பூரியின் அரசர் என்பவர் வெறும் அரசர் மட்டுமில்லை. அவர் ஒரு பிலாஷபர். அவர் வாழும் கடவுளாக அனைவரிடமும் இருக்கிறார். எனது அரசர் திருமணம் செய்து கொண்டது காஞ்சி இளவரசி தான். எனது அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர். நான் தமிழகத்தை சேர்ந்த தாயின் மகன். எனது சமுதாயத்தில் அம்மா, சகோதரிகள் தான் எல்லாவற்றையும் விட மேலானவர்கள் என்று நினைக்கிறோம். எனது வார்த்தைகள் யாருடைய மனதையாவத புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.
தமிழ் என்பது பழமையான மொழி. தமிழை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. நாங்கள் தமிழ் மொழிக்காக பாடுபட்டு வருகிறோம். உண்மை எப்போதும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்க முயலவில்லை. பிரதமர் மோடி அரசு தமிழுக்கு எதிரானது இல்லை. தமிழை நானும் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிப்போர் குறைந்து வருகிறார்கள்'' என்றார்.
அதாவது தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள சாம்பல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராக உள்ளார். ஒடிசா மக்கள் வழிபடும் தெய்வமாக பூரியில் உள்ள ஜெகன்நாதர் உள்ளார். இந்த கோவிலில் நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது
இந்த கோவில் அமைந்துள்ள பூரி பகுதியை ஆட்சி செய்த அரசர் புருசோத்தம். இவர் தமிழகத்தின் காஞ்சி இளவரசியை திருமணம் செய்தார். இதனை குறிப்பிட்டு தான் தர்மேந்திர பிரதான் தனது தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications