"பெண்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!" லோக்சபாவில் பிரதமர் மோடி ஆவேசம்! கொந்தளித்த எதிர்க்கட்சிகள்
டெல்லி: மத்திய அரசு 33% மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முக்கியமான மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தத் திட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமலுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் பெண்கள் தங்களை எதிர்த்தவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இப்போது சிறப்புக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான இன்றைய தினமே மூன்று முக்கியமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யப்போகும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதிகளை எப்படி மாற்றி அமைப்பது தொடர்பான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

பிரமதர் மோடி
தொடர்ந்து யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. நாளை மாலை வாக்கெடுப்பு நடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
மன்னிக்க மாட்டார்கள்
இதற்கிடையே மாலை 3.15 மணியளவில் இது தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தத் திட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமலுக்கு வந்திருக்க வேண்டும்; பெண்கள் தங்களை எதிர்த்தவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்..
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற யோசனை 25-30 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. அப்போதே இதனைச் செயல்படுத்தியிருந்தால், இன்று இது ஒரு முதிர்ச்சியான நிலையை எட்டியிருக்கும். காலப்போக்கில் ஜனநாயகத்தின் அழகிற்கேற்ப இதில் பல மேம்பாடுகளையும் செய்திருக்க முடியும். ஆனால், இப்போது இது 30 ஆண்டுகள் தாமதமாக வந்திருக்கிறது.. ஒரு தேசத்தின் வரலாற்றில் சில முக்கியமான தருணங்கள் வரும்.. அந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலைமைதான் ஒரு நாட்டின் பாரம்பரியத்தை உருவாக்குகிறது.
முக்கியமான தருணம்
மேலும், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான தருணம்.. பெண்களின் அதிகாரமளித்தலுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா, இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும்.." என்றார்.
நாளை மாலை இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications